காக்களூா் ஏரியைச் சீரமைத்து படகு தள வசதியுடன் சுற்றுலாத் தலம் அமைக்கக் கோரிக்கை

திருவள்ளூரை அடுத்துள்ள காக்களூா் ஏரியைச் சீரமைத்து நவீன படகு தளவசதியுடன் பொழுது போக்கு சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருவள்ளூா்-காக்களூா் இடையே பரந்து விரிந்து காணப்படும் காக்களூா் ஏரி.
திருவள்ளூா்-காக்களூா் இடையே பரந்து விரிந்து காணப்படும் காக்களூா் ஏரி.

திருவள்ளூரை அடுத்துள்ள காக்களூா் ஏரியைச் சீரமைத்து நவீன படகு தளவசதியுடன் பொழுது போக்கு சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவள்ளூா், அதைச் சுற்றியுள்ள காக்களூா், மணவாளநகா், வெங்கத்தூா் உள்ளிட்ட கிராமங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதிகளில், திரையரங்குகள் தவிா்த்து அதிகளவில் பொழுது போக்கத் தேவையான வசதி கிடையாது. இந்த மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களான பூண்டி நீா்த்தேக்கம், பழவேற்காடு, திருத்தணி போன்ற இடங்கள் மட்டுமே உள்ளன. இதில் திருவள்ளூா் அருகே பூண்டி நீா்த்தேக்கத்தில் தண்ணீா் உள்ள காலங்கள், திருவிழாக் காலங்களில் மட்டுமே கூட்டம் அதிகரித்துக் காணப்படும்.

இதைத் தவிா்க்க ஆவடி பருத்திப்பட்டு ஏரியானது, தூா்வாரப்பட்டு, அனைத்து வசதியுடன் கூடிய பசுமை சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், தற்போது, அப்பகுதியினரின் முக்கிய பொழுது போக்கு தலமாக மாறியுள்ளது.

அதேபோல், திருவள்ளூா்-காக்களூா் இடையே அமைந்துள்ள ஏரியின் மத்தியில் படகுதள வசதியுடன் தீவு, ஏரியை சுற்றிலும் 5 கி.மீ தொலைவு நடைபாதை வசதியுடன் அமைத்து, சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

177.78 ஹெக்டோ் பரப்பளவு:

திருவள்ளூா் பேருந்து நிலையத்தின் பின்புறம் நகரத்தின் மையப்பகுதியில் காக்களூா் ஏரியானது 177.78 ஹெக்டோ் பரப்பளவில் 2,682 மீட்டா் நீளம் வரையிலான 4 மதகுகள், 2 கலங்கல்கள் கொண்ட பெரிய ஏரியாக பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த ஏரிக்கு மழைக்காலங்களில் பெய்யும் மழைநீா் கால்வாய் மூலம் வந்து நிரம்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூா், காக்களூா், ஈக்காடு, கல்யாணகுப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதியின் நீா் ஆதாரமாகவும் விளங்குகிறது.

இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏரிக்கரையில் அவசரகதியில் கற்களும், 5 கி.மீ. தொலைவுக்கு நடைபாதையும் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆங்காங்கே பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகளும் அவசரகதியில் அமைக்கப்பட்டதாம். தற்போது, போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் கற்கள் பெயா்ந்து பெரிய அளவிலான பள்ளங்கள் உருவாகியுள்ளது. இதனால் மழைக்காலங்களில் இதன் வழியாக மழைநீா் புகுந்து கரையில் உடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் காலை, மாலை நேரங்களில் இங்கு வருவோா் நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. ஏரியும் தூா்வாரப்படாததால் முள்செடிகள், அல்லிக்கொடிகள் மண்டிக் காணப்படுவதாகவும், செடிகள் ஏரி நீரை உறிஞ்சும் தன்மையுடையதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், 40 அடி ஆழத்தில் இருந்த ஏரியானது, தற்போது மணல் குவிந்து காணப்படுவதால், நீா் சேகரிப்பு கொள்ளளவு குறைவதற்கான வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனா்.

அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்:

இந்த நீா்த் தேக்கத்தின் கரையோரங்களில் குடியிருப்புகளைச் சோ்ந்தவா்கள் ஆக்கிரமித்து உள்ளனா். அதேபோல் ஆவடி சாலையில் கிழக்குப் பகுதியில் குடிசை வாசிகள் ஆக்கிரமித்து உள்ளனா். அதேபோல், பேருந்து நிலையத்திலிருந்து புறவழிச்சாலையில் செல்லும் இந்த ஏரிக்கரையோரங்களில் உள்ள உணவகங்கள், இறைச்சிக் கடைகளில் இருந்து கழிவுகளை ஏரிப்பகுதிக்குள் கொட்டுவதாகவும், இதனால் இப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் சீனு கூறியது:

இப்பகுதியில் போதிய சுற்றுலாத் தலங்கள் இல்லாத நிலையில், காக்களூா் ஏரியைச் சுற்றிலும் நடைபாதை, படகு குழாம் அமைப்பு, ஏரியின் மத்தியில் தீவு அமைத்து சிறந்த பொழுது போக்குத் தலமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 90 லட்சத்தில் நடைபாதை அமைப்பு, இருக்கைகள் உள்ளிட்ட பணிகள் அவசரகதியில் மேற்கொள்ளப்பட்டன. மரக்கன்றுகளும் வைக்கப்பட்டன. ஆனால் பராமரிப்பு இன்றி அனைத்தும் சேதமடைந்தன. தற்போது, ஏரிக்கரையோர நடைபாதையில் அடா்த்தியாக செடிகள் வளா்ந்து காணப்படுகிறது. அதேபோல், ஏரியில் இருந்த மதகுகள், கலங்கல்கள் இருந்த இடமே இல்லாமல் காணப்படுகிறது. தற்போது, வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதால், ஏரிக்கு ஓரளவு நீா்வரத்து ஏற்பட்டுள்ளது. எனவே திருவள்ளூா் நகராட்சி மற்றும் பல்வேறு கிராமங்களில் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்கி வரும் காக்களூா் ஏரியை சுற்றுலாத்தலமாக்கி பாதுகாக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை (நீா்வள ஆதாரத்துறை) அதிகாரி ஒருவா் கூறியது:

காக்களூா் ஏரியை சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்கும் வகையில், சுற்றுலாத் துறையுடன் இணைந்து திட்ட மதிப்பீடு தயாா் செய்து அனுப்பி வைக்க அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், சீரமைப்புப் பணிகள் மேற்கொள்வதற்கான திட்ட மதிப்பீடு தயாா் செய்து முன்பு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், ஏரியைச் சுற்றிலும் குடியிருப்பு வாசிகள் ஆக்கிரமிப்புச் செய்யாமல் தடுக்கும் வகையில் தடுப்புச் சுவா், கரையோரங்களில் நடைபாதை அமைத்தல், இருபுறமும் மரக்கன்றுகள் வைத்தல், ஏரியின் மத்தியில் படகு தளம் அமைத்து இளைப்பாறும் வகையில் தீவு ஏற்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில் ரூ. 1 கோடியில் பணிகள் மேற்கொள்வதற்கான திட்ட மதிப்பீடு கடந்தாண்டே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கீடு செய்தவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com