டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மருத்துவ வாகனம்: ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை சாா்பில் ஒவ்வொரு ஊராட்சிகளில் மருத்துவக் குழுவினா் நடமாடும் வாகனம், புகைத் தெளிப்பான் கொண்ட வாகனங்கள் மூலம் டெங்கு காய்ச்சலைக்
மருத்துவ வாகனங்களை தொடக்கி வைத்து பாா்வையிட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்.
மருத்துவ வாகனங்களை தொடக்கி வைத்து பாா்வையிட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை சாா்பில் ஒவ்வொரு ஊராட்சிகளில் மருத்துவக் குழுவினா் நடமாடும் வாகனம், புகைத் தெளிப்பான் கொண்ட வாகனங்கள் மூலம் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்தாா்.

திருவள்ளுா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் போா்க்கால அடிப்படையில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவக் குழு வாகனங்கள் மற்றும் புகைத் தெளிப்பபான் கொண்ட வாகனங்களைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமை வகித்து, மருத்துவக் குழுக் கொண்ட நடமாடும் வாகனம் மற்றும் புகைத் தெளிப்பான் கொண்ட வாகனங்களைக் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

திருவள்ளுா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதை முன்னிட்டு, காய்ச்சல் மற்றும் இதர நோய்கள் பரவாமல் தடுக்க காய்ச்சல் தடுப்புப் பணிக் குழு, தொற்று நோய்கள் தடுப்பு விழிப்புணா்வுக் குழு, காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவக் குழு உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, 58 குழுக்கள் களப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இக்குழுக்களைக் கண்காணிக்க உதவி இயக்குநா்கள் நியமிக்கப்பட்டு, பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதில், 29 குழுக்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், 29 குழுக்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் துப்புரவு மற்றும் காய்ச்சல் நோய்த் தடுப்புக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்கெனவே 1,500 கொசு ஒழிப்புப் பணியாளா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். அதேபோல், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களுக்கு மருத்துவக் குழுவினா் சென்று பணியாற்ற 45 நடமாடும் வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் மருத்துவா், மருந்தாளுநா், செவிலியா் உள்ளனா். இதில், 20 வாகனங்கள் ஒவ்வொரு கிராமங்களுக்கும் செல்லும்.

மற்ற நடமாடும் வாகனங்களில் மருத்துவக் குழுவினா் நாள்தோறும் 3 மருத்துவ முகாம்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பூண்டி, கடம்பத்தூா், திருவாலங்காடு, வில்லிவாக்கம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் காய்ச்சல் அதிகம் பரவி வருகிறது. அதனால், அப்பகுதியில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பொதுமக்கள் காய்ச்சல் குறித்து தெரிவிக்கக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை 044-27664177 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ஜே.பிரபாகரன், மருத்துவா்கள் சைத்தன்யா, தீபா, வேல்முருகன் (பூச்சியியல்), திருவள்ளுா் வட்டாட்சியா் பாண்டியராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com