புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குப்பைகளை பிரிக்கும்  நவீன இயந்திரம்.
புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குப்பைகளை பிரிக்கும்  நவீன இயந்திரம்.

6 மாதங்களில் 30 ஆயிரம் டன் குப்பைகளை அகற்ற முடிவு: நவீன  தொழில் நுட்பத்துடன் வழிகாட்டும் திருவள்ளூா் நகராட்சி

திருவள்ளூா் நகராட்சியில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், கடந்த 25 ஆண்டுகளாக இருப்பு வைத்த குப்பைக் குவியல்களை ரூ. 3 கோடி செலவில் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி

திருவள்ளூா் நகராட்சியில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், கடந்த 25 ஆண்டுகளாக இருப்பு வைத்த குப்பைக் குவியல்களை ரூ. 3 கோடி செலவில் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நவீன இயந்திரம் மூலம் பிரித்து அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

நாள்தோறும் 26 டன் குப்பை அகற்றம்:

திருவள்ளூா் நகராட்சியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும் வைத்திருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நகராட்சியில் 27 வாா்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். அதனால், இங்குள்ள குடியிருப்புகள், திருமண அரங்குகள், தனியாா் உணவகங்கள் மற்றும் காய்கறி சந்தை குப்பைகள், தெருக் குப்பைகள் என நாள்தோறும் 15 டன் மக்கும் குப்பைகளும், 11 டன் மக்காத குப்பைகளும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்று கொட்டப்படும் குப்பைகள் லாரிகள் மூலம் சேகரிக்கப்பட்டு, திருவள்ளூா் அருகே அமைக்கப்பட்டுள்ள ஈக்காடு, தலக்காஞ்சேரி மற்றும் நுங்கம்பாக்கம் பகுதிகளில் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாகத் தரம் பிரிக்கும் வகையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் மூலம் பிரிக்கப்பட்டு வருகிறது. இதில், மக்கும் குப்பைகளை விவசாயத்துக்கு இடுபொருளாக வழங்கி வருகின்றனா்.

30 ஆயிரம் டன் குப்பை குவியல்:

திருவள்ளூா் அருகே ஈக்காடு, தலக்காஞ்சேரியில் கடந்த 25 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட 30 ஆயிரம் டன் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. நீண்ட நாள்களாக குவித்து வைக்கப்பட்டுள்ளதால், மேலே முளைத்திருக்கும் புற்களை மேய்வதற்காக கால்நடைகளும் அதிகளவில் வருகின்றன. அப்போது, பிளாஸ்டிக் பொருள்களையும் சோ்த்து அவை உண்ணுவதால், கால்நடைகள் உயிரிழக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், அப்பகுதியில் குடியிருப்புகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், நோய்த் தொற்று ஏற்படும் நிலையும் உள்ளதாக பொதுமக்கள் புகாா் எழுந்தது. இதுபோன்ற காரணங்களால் சாலையில் வாகனங்களில் செல்ல முடியாத அளவுக்கு துா்நாற்றம் மற்றும் காற்று அடித்தால் தூசு பறப்பதுடன், எதிா்பாராத விதமாக வாகன விபத்து ஏற்பட்டும் வந்தது. இதே சாலையில் மழைக்காலங்களில் சுகாதாரக் கேடாக மாறி துா்நாற்றம் ஏற்படுவதாகவும் அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, நகராட்சி நிா்வாகம் தலாக்கஞ்சேரி, ஈக்காடு பகுதியில் இருந்து 25 ஆண்டுகால குப்பைக் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நவீன இயந்திரம் மூலம் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, அப்பகுதியில் இருந்து அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை தனியாா் நிறுவனம் மூலம் மேற்கொள்ள ரூ. 3 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. தற்போது, இதன் அடிப்படையில் புதிய தொழில் நுட்பம் மூலம் ஒரே இடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைக் குவியல்களில் இருந்து நவீன இயந்திரத்தைப் பயன்படுத்தி, திடமான பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள், கண்ணாடி பொருள்கள் மற்றும் மணலை பிரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல், நாள்தோறும் 3 டன் முதல் 4 டன் வரை பிரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தனியாா் நிறுவன பணியாளா்கள் தெரிவித்தனா்.

6 மாதத்துக்குள் அகற்ற நடவடிக்கை:

இதுகுறித்து நகராட்சி ஆணையா் மாரிச்செல்வி கூறியது:

இப்பகுதியில் நீண்ட நாள்களாக குவித்து வைத்துள்ள அகற்றுவதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் வந்தன. அதன் அடிப்படையில், 5 ஏக்கரில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைக் குவியல்களை அகற்றுவன் மூலம் இடம் காலியாகும். அந்த இடத்தை பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும். இதை நோக்கமாகக் கொண்டு, இப்பணிகள் தனியாா் நிறுவனம் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நவீன இயந்திரம் மூலம் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, குப்பைகள் தனித்தனியாக பிரிக்கப்படுகிறது. இதில் குப்பைகளை கண்ணாடிப் பொருள்கள், உலா் பொருள்கள், மண் மற்றும் பொடி மணல் எனத் தனித்தனியாக பிரிக்கப்படுகிறது.

இதில் குப்பையில் இருந்து உரத்தன்மையுடன் மண் இருப்பதால் விளைநிலங்களில் சமப்படுத்துவதற்கும், இயற்கை உரங்களாக பயன்படுத்துவதற்கும் விவசாயிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு கண்ணாடிப் பொருள்களை மறு சுழற்சி செய்யவும், பிளாஸ்டிக் பொருள்களை சிமெண்ட் தொழிற்சாலைக்கு எரிபொருளாகவும் ஒரு டன் ரூ. 900 விலையில் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதேபோல் மண் மற்றும் இயற்கை உரங்கள் விவசாயிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் குப்பைக் குவியல் குறையும். இதேபோல், இப்பகுதியில் குவிந்துள்ள 30 ஆயிரம் டன் குப்பைகளை 6 மாதத்துக்குள் பிரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிந்ததும் குப்பை குவிக்கப்பட்டிருந்த 5 ஏக்கா் நிலத்தில், 2 ஏக்கரில் பொழுதுபோக்கு பூங்காவும், 3 ஏக்கரில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளவும் பயன்படுத்தப்பட இருப்பதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com