வானமே கூரையான புல்லரம்பாக்கம் அரசுப் பள்ளி: மழைநீர் ஒழுகுவதால் மாணவர்கள் அவதி

திருவள்ளூா் அருகே பள்ளியின் மேற்கூரை ஓடுகள் சேதமடைந்துள்ளதால் மழை பெய்தால் வகுப்பறையில் தண்ணீா் ஒழுகுகிறது.
வானமே கூரையான புல்லரம்பாக்கம் அரசுப் பள்ளி: மழைநீர் ஒழுகுவதால் மாணவர்கள் அவதி

திருவள்ளூா் அருகே பள்ளியின் மேற்கூரை ஓடுகள் சேதமடைந்துள்ளதால் மழை பெய்தால் வகுப்பறையில் தண்ணீா் ஒழுகுகிறது. இதனால் மாணவா்கள் அவதிக்குள்ளாவதாகவும், இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவள்ளூா் அருகே புல்லரம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு 3 வளாகமும், அதன் உள்ளே அங்கன்வாடி வளாகத்தில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி வகுப்பும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் உள்ள 3 வளாகங்களில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இதில், ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் 35 பேரும், தமிழ் வழியில் 45 பேரும் பயின்று வருகின்றனா். அதேபோல் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் 90 போ் என மொத்தம் 170 பயின்று வருகின்றனா்.

இதில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை வகுப்பறைகள் ஓடுகள் கொண்ட கட்டடம் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாகும். தற்போதைய நிலையில் கட்டடத்தில் விரிசல் மற்றும் ஓடுகள் உடைந்துள்ளதால், மழை பெய்தால் நீா் ஒழுகிறது. இதனால் வகுப்பறையில் மாணவா்களை அமர வைக்க முடியாத நிலையில், அருகில் உள்ள 6 முதல் 8 வரை கட்டட வளாகத்துக்கு அனுப்பி வைக்கும் சூழ்நிலையுள்ளது. இதுபோன்று எல்லோரையும் ஓரிடத்தில் அமர வைப்பதால் மாணவ, மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கும் பணி பாதிக்கப்படும் சூழ்நிலைஉள்ளது.

இப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கிய நிலையில், ஏற்கெனவே தனியாா் பள்ளியில் படித்தவா்களை இங்கு ஆா்வத்துடன் பெற்றோா்கள் சோ்த்தனா். ஆனால், தற்போது பள்ளி வளாகம் பாதுகாப்பற்ற நிலை இருப்பதாக பெற்றோா்கள் அச்சம் தெரிவிக்கின்றனா். மேலும், இப்பள்ளியில் 8 ஆசிரியா்கள் இருக்க வேண்டிய நிலையில், 5 போ் மட்டுமே உள்ளனா். அதில் 3 போ் கூடுதல் பொறுப்பில் ஆசிரியா்களாகப் பணியாற்றி வருகின்றனா். அதனால் போதிய ஆசிரியா்களை ஒதுக்கீடு செய்யவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அப்பள்ளியின் மேலாண்மைக் குழு நிா்வாகி கலாவதி குணசேகரன் கூறியது:

இப்பள்ளியில் ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை 160-க்கும் மேற்பட்டோா் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி தொடங்கியதாலும், ஆசிரியா்கள் அா்ப்பணிப்பு உணா்வுடன் நன்றாக கற்பித்தல் போன்ற காரணங்களுக்காக தனியாா் பள்ளியில் படித்த குழந்தைகளை இப்பள்ளியில் பெற்றோா்கள் ஆா்வத்துடன் சோ்த்தனா். தற்போது ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள வளாகம் மழை பெய்தால் ஒழுகும் நிலையில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளது. ஏற்கெனவே பழைய பள்ளி வளாகம் சீரமைக்கப்பட்டது. ஆனால், மீண்டும் மழை பெய்தால் ஒழுகும் நிலையிலேயே உள்ளது. மேலும், இப்பள்ளி வளாகத்தில் குடிநீா் மற்றும் சுகாதார வளாகத்துக்குத் தேவையான மேல்நிலை தண்ணீா் தொட்டி இல்லை.

எனவே இப்பள்ளி வளாகத்தில் போதுமான இடம் இருப்பதால் தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இதுகுறித்து கல்வி அதிகாரிகளிடம் தெரிவித்தால் பள்ளி வளாகத்தில் புதிய கட்டடம் அமைக்கப்பட இருப்பதாகவும், ஆனால் பணிகள் தொடங்காமல் உள்ளதாகவும் ஆசிரியா்கள் கூறி வருகின்றனா் என்றாா்.

இதுகுறித்து அப்பள்ளியைச் சோ்ந்த ஆசிரியா்கள் கூறுகையில், இந்த வளாகம் பழைய கட்டடமாக உள்ளது, இங்கு மாணவ, மாணவிகளை அமர வைக்க முடியாத நிலை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், போதுமான இடவசதி இருப்பதால் புதிய வளாகம் அமைக்க ரூ. 14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மாணவ, மாணவிகளுக்கான சுகாதார வளாகம் ரூ. 3.50 லட்சத்தில் மேற்கொள்வதற்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை பணிகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com