திருவள்ளூர் நகராட்சியில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகள்

திருவள்ளூர் நகராட்சியில் குவிந்து வரும் குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலக்காஞ்சேரி சாலையில் இருபுறமும்  குவிந்துள்ள குப்பைகள் 
தலக்காஞ்சேரி சாலையில் இருபுறமும்  குவிந்துள்ள குப்பைகள் 


திருவள்ளூர் நகராட்சியில் குவிந்து வரும் குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில், ஒவ்வொரு வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் நகராட்சி வாகனங்கள் மூலம்  எடப்பாளையம், ஈக்காடு, தலக்காஞ்சேரி கிராமச் சாலையோரத்தில் மலைபோல் குவித்துள்ளன. நாள்தோறும் 15 டன் மக்கும் குப்பைகளும், 11 டன் மக்காத குப்பைகளும் குவிக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வருகின்றனர். இப்பகுதியில் நகராட்சி குடிநீர் மேல்நிலைத் தொட்டி, தனியார் மீன் சந்தை, காய்கறி சந்தை வளாகம், தொழிற்சாலைகள், டாஸ்மாக் கடைகள், நகராட்சி மின் மயானம் ஆகிய இடங்களுக்குச் செல்வதற்கு இச்சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 
அதோடு, நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இவ்வழியாகச் செல்கின்றன. அப்போது, காற்றில் சாலையோரம் குவிந்துள்ள குப்பைகள் பறப்பதால், வாகன ஓட்டிகள் அவசிக்குள்ளாகின்றனர். மேலும், இக்குப்பைகளில் உள்ள உணவுக் கழிவுகளை மேய்வதற்கு சாலையோரத்தில் ஆடுகள், மாடுகள் வருவதால், எதிர்பாராத விதமாக வாகனங்களில் அடிபடுகின்றன.
தற்போது மழை பெய்து வருவதால் குப்பைகள் மழைநீரில் கலந்து சாலையில் தேங்குகிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. 
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ரகுபாலாஜி கூறியது:
திருவள்ளூர் நகராட்சிப் பகுதியில் சேரும் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால்  கால்நடைகளின் மேய்ச்சல் இடமாக மாறியுள்ளது. மேலும், நெகிழி கழிவுகளையும் கால்நடைகள் உண்ணும் அபாயம் உள்ளது. 
எனவே, தனியார் மற்றும் நகராட்சி இடங்களில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை மூலம் அகற்றி சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியது: 
திருவள்ளூரை அடுத்த நுங்கம்பாக்கத்தில் ரூ. 5.94 கோடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், மக்கும், மக்காத குப்பைகள் சேகரிப்பதற்கான தொட்டிகள் அமைக்கப்பட்டு, குப்பைகளில் இருந்து உரம் தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
இதேபோல், தலக்காஞ்சேரி பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு ரூ. 3 கோடிக்கு  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த 2 மாதங்களுக்குள் இப்பணிகள் நிறைவடையும் என்றார்.

மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை மேயும் கால்நடைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com