பூண்டி நீர்த்தேக்கத்தில் கவிழ்ந்த மீன்பிடி படகு: நீரில் மூழ்கிய 3 பேரும் மீட்பு

பூண்டி நீர்த்தேக்கத்தில் புகைப்படம் எடுக்கச் சென்ற இளைஞர்களின் மீன்பிடி படகு கவிழ்ந்ததையடுத்து, 3 பேரையும் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
பூண்டி நீர்த்தேக்கத்தில் கவிழ்ந்த மீன்பிடி படகு: நீரில் மூழ்கிய 3 பேரும் மீட்பு


திருவள்ளூர்: பூண்டி நீர்த்தேக்கத்தில் புகைப்படம் எடுக்கச் சென்ற இளைஞர்களின் மீன்பிடி படகு கவிழ்ந்ததையடுத்து, 3 பேரையும் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

திருவள்ளூர் அருகே பூண்டி நீர்த்தேக்கத்தில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஏராளமானோர் நேரில் பார்ப்பதற்கு வருகின்றனர். இந்த நிலையில், திருவள்ளூர் அருகே அரண்வாயல் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (22), வெங்கத்தூர் பிரபுகுமார் (22) மற்றும் திருவள்ளூர் பெரியகுப்பம் குணா (23) உள்பட 10 பேர் சேர்ந்து பூண்டி நீர்தேக்கத்தில் புகைப்படம் எடுப்பதற்காக புதன்கிழமை வந்தனர்.

அப்போது, நீர்த்தேக்க கரையோரத்தில் நிறுத்தி வைத்திருந்த சதுரங்கப்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசனின் மீன்பிடிக்கும் படகை எடுத்துக் கொண்டு வெங்கடேசன், பிரபுகுமார் மற்றும் குணா ஆகியோர் ஏரியின் உள்பகுதிக்கு சென்றார்களாம். அப்போது, படகு காற்றில் நீண்ட தூரம் சென்றதை அறிந்த நிலையில் சக நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதையடுத்து உடனே திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதையடுத்து விரைந்து வந்த தீயணைத்துத்துறையினருடன் புல்லரம்பாக்கம் பகுதி இளைஞர்களும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 3 மணிநேர தேடுதலுக்குப் பிறகு, நீர்த்தேக்கத்தின் மையப் பகுதியில் படகு கவிழ்ந்த நிலையில் நீரில் முழ்கிய நிலையில் படகை கையில் பிடித்தவாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர் இளைஞர்கள். அவர்களை தீயணைப்பு துறையினர் உயிருடன் பாதுகாப்பாக மீட்டனர்.

பின்னர் அந்த இளைஞர்களை அழைத்து வரும் போது இரவு நேரமானதால் அப்பகுதி மக்கள் செல்லிடபேசி மூலம் டார்ச் அடித்து கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அதைத் தொடர்ந்து உடனே மீட்கப்பட்ட 3 பேரையும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.

 இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலையில் நீர்த்தேக்கம் நிரம்பிய நிலையில் உபரி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதைப் பார்ப்பதற்காக சுற்று கிராம பகுதிகளைச் சேர்ந்தோர் நாள்தோறும் குவிந்து வருகின்றனர். ஏற்கெனவே நீர்த்தேக்கத்தில் மீன் பிடிக்கச் செல்லும் இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பதைத் தொடர்ந்து பாதுகாப்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அதோடு, இப்பகுதியில் யாரும் பாதுகாப்பு தடுப்புகளை மீறி உள்ளே செல்லக் கூடாது எனவும் பொதுப்பணித் துறையினர் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். 

இதையும் மீறி ஆபத்தை உணராமல் ஆர்வ மிகுதியால் நீர்த்தேக்கத்தில் செல்லிடபேசி மூலம் புகைப்படம் எடுத்து வருவது அதிகரித்து வருகிறது. இதில் ஒரு சில நேரங்களில் எதிர்பாரதவிதமாக ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.

எனவே, இதைத் தடுக்க பாதுகாப்புக்காக நீச்சல் பாதுகாப்பு வீரர்கள் கொண்டு குழு அமைத்து கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com