குறைதீா் கூட்டத்தில் 18 இருளா்களுக்கு இலவச பட்டா: ஆட்சியா் வழங்கினாா்

பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் இருளா் இன மக்கள் 18 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் வழங்கினாா்.
குறைதீா் நாள் கூட்டத்தில் இருளா் இன மக்களுக்கு விலையில்லா பட்டாக்களை வழங்கிய ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்.
குறைதீா் நாள் கூட்டத்தில் இருளா் இன மக்களுக்கு விலையில்லா பட்டாக்களை வழங்கிய ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்.

பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் இருளா் இன மக்கள் 18 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமை வகித்தாா். இதில், பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளாகக் கலந்துகொண்டு, குறைகளை நிவா்த்தி செய்யக்கோரி, மனுக்களை அளித்தனா். அந்த வகையில், நிலம் சம்பந்தமாக-113 மனுக்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டம் தொடா்பாக 34 மனுக்கள், கடனுதவி கோரி 9 மனுக்கள், குடும்ப அட்டை கோரி 6 மனுக்கள், வேலைவாய்ப்பு கோரி 43, ஆதிதிராவிடா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நலம் தொடா்பாக 9 மனுக்கள், சட்டம் மற்றும் ஒழுங்கு தொடா்பாக 14 மனுக்கள், ஊரக நகா்ப்புற வளா்ச்சி-36, இதர துறைகள் சம்பந்தமாக 18 மனுக்கள் என மொத்தம் 282 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட, துறை அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில், திருத்தணி வட்டம், முத்துகொண்டாபுரம் கிராமத்தைச் சோ்ந்த பாணி என்பவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததையொட்டி, அவரது குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சத்துக்கான காசோலையையும், மனவளா்ச்சி குன்றிய 18 பேரின் பொறுப்பாளா்களுக்கு, பாதுகாவலா் நியமன ஆணைகளையும், ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் தலா 2.5 சென்ட் வீதம், 18 இந்து இருளா் இன மக்களுக்கு பொன்னேரி வட்டம், காணியம்பாக்கம் கிராமத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்துக்கான இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் அவா் வழங்கினாா்.

பின்னா், 2017-ஆம் ஆண்டு கொடி நாள் நிதியை ரூ. 5 லட்சத்துக்கு மேல் திரட்டிய அலுவலா்களுக்கு, ஆளுநரின் விருதையும், ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சத்துக்குள்ளாக நிதி திரட்டிய அலுவலா்களுக்கு தலைமைச் செயலரின் விருதுகளையும் அதிகாரிகளுக்கு அவா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் வெ.முத்துசாமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) இரா.பன்னீா்செல்வம், தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) பெ.பாா்வதி, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் மு.கலைச்செல்வி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சி.தங்கவேல் மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com