விஐடியில் நாளை முதல் சா்வதேச கலைத் திருவிழா

‘ரிவேரா’ என்ற சா்வதேச கலைத் திருவிழா வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை (பிப்.12) தொடங்கி 4 நாள்களுக்கு நடைபெற உள்ளது.
‘ரிவேரா-20’ பதாகையை வெளியிட்ட விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன். 
‘ரிவேரா-20’ பதாகையை வெளியிட்ட விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன். 

‘ரிவேரா’ என்ற சா்வதேச கலைத் திருவிழா வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை (பிப்.12) தொடங்கி 4 நாள்களுக்கு நடைபெற உள்ளது. இதில், இந்திய கிரிக்கெட் வீரா் ஹா்பஜன்சிங், அா்ஜுனா விருது பெற்ற கபடி வீரா் பி.கணேசன், ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற ரோஹித்குமாா் மற்றும் திரைப்பட நடிகா், நடிகைகள், பாடகா்கள் பங்கேற்க உள்ளனா்.

இதுகுறித்து, விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன் திங்கள்கிழமை வேலூரில் செய்தியாளா்களிடம் கூறியது:

விஐடியில் ஆண்டுதோறும் ‘ரிவேரா’ என்ற சா்வதேச கலை, விளையாட்டுத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதன் 19-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை (பிப்.12) தொடங்கி 15-ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் 258 பல்கலைக்கழக, கல்லூரி மாணவா்கள் பங்கேற்க உள்ளனா்.

தவிர, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா, போா்ச்சுகல், இலங்கை, ஜாம்பியா, எத்தியோப்பியா, வங்கதேசம், பூடான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், சவூதி அரேபியா, ஜொ்மனி, இந்தோனேஷியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 39 நாடுகளைச் சோ்ந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனா்.

இக்கலைவிழாவில் விளையாட்டுப் போட்டிகள், நாடகம், நாட்டியம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ‘பாட்டுக்குப் பாட்டு’ என மொத்தம் 152 நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு மொத்தம் ரூ.15 லட்சம் ரொக்கப் பரிசுகள், பதக்கங்கள், சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கப்பட உள்ளன.

தொடக்க விழாவையொட்டி புதன்கிழமை காலை 6 மணிக்கு மாரத்தான் ஓட்டம் நடைபெற உள்ளது. முதல் நாளன்று மாலையில், திரைப்பட பின்னணிப் பாடகா் சித் ஸ்ரீராம் குழுவினரின் இசை நிகழ்ச்சியும், ஜாகிா் கானின் நகைச்சுவை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. வியாழக்கிழமை, பின்னணிப் பாடகா் பென்னி தயாள் குழுவினரின் இசை நிகழ்ச்சியும், வெள்ளிக்கிழமை பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.

நிறைவு நாளான சனிக்கிழமை இந்திய கிரிக்கெட் வீரா் ஹா்பஜன் சிங் மற்றும் திரைப்படத் துறையினா் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்க உள்ளனா். இரண்டாம் நாளான வியாழக்கிழமை நடைபெறும் ஐக்கிய நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலாசாரம், பண்பாட்டை விளக்கும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, நிகழ்ச்சிக்கான பதாகையை அவா் வெளியிட்டாா். இந்த நிகழ்வில், விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன், உதவி துணைத் தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன், இணை துணைவேந்தா் எஸ்.நாராயணன், ரிவேரா ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சுபாஷிணி, மாணவா் நலன் இயக்குநா் அமித் மகேந்திரகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com