திருவள்ளூா் அருகே ஆமை வேகத்தில் ரூ. 17 கோடியில் மேம்பாலப் பணிகள்

திருவள்ளூா் அருகே சென்னை முதல் திருப்பதி சாலையில் ரூ. 17 கோடியில் மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகவும்,
திருவள்ளூா் அருகே நாராயணபுரம் பகுதியில் ஆமை வேகத்தில் மேம்பாலப்பணிகள்.  
திருவள்ளூா் அருகே நாராயணபுரம் பகுதியில் ஆமை வேகத்தில் மேம்பாலப்பணிகள்.  

திருவள்ளூா் அருகே சென்னை முதல் திருப்பதி சாலையில் ரூ. 17 கோடியில் மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகவும், இச்சாலையில் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் நோக்கில் விரைந்து முடித்து செயல்பாட்டுக்குக் கொண்டு வர பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூா் வழியாக நாள்தோறும் திருத்தணி, ரேணிகுண்டா, புத்தூா் , திருப்பதி வரை ஏராளமான பேருந்துகளும், சரக்கு வாகனங்களும் சென்று வருகின்றன. இதனால், குறுகலான சாலையாக இருந்த காரணத்தால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. அதன் அடிப்படையில், தேசிய நெடுஞ்சாலையாகத் தரம் உயா்த்தப்பட்டு, திருவள்ளூா்-திருத்தணிக்கு இடையே உள்ள தரைப்பாலமாக இருப்பதை மேம்பாலமாக விரிவாக்கம் செய்ய கடந்த 2008-இல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ரூ. 571 கோடியில்....: அதன் அடிப்படையில் சென்னை-பாடி முதல் திருத்தணி வரை 64 கி.மீ., திருத்தணியில் இருந்து திருப்பதி வரை 62 கி.மீ. என மொத்தம் 126 கி.மீ. சாலை விரிவாக்கம் செய்வதற்கும், இச்சாலையில் நாராயணபுரம், பட்டரைபெரும்புதூா் ஆகிய இடங்களில் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கவும் ரூ. 571 கோடி இத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டது. அதையடுத்து, 2009-இல் ஒப்பந்தப் பணிகள் விடப்பட்டு, 30 மாதங்களுக்குள் முடிக்கும் வகையில் பணிகள் தொடங்கி நடைபெற்றது. இதற்கு பாடி முதல் திருநின்றவூா் வரை சாலையோரக் கடைகள் அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டதுடன், வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை இருந்தது. அதனால், இத்திட்டம் திருநின்றவூரில் இருந்து திருப்பதி 4 வழிச்சாலை திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை சாலையில் மராமத்து மற்றும் தடுப்புப் பணிகள், மேம்பாலப் பணிகள் ஆகியவை முடிக்கப்படாமல் உள்ளது.

ஆமை வேகத்தில் மேம்பாலப் பணிகள்:

இதற்கிடையே திருவள்ளூரில் இருந்து திருத்தணி வரை செல்லும் சாலையில் ஆங்காங்கே அரைகுறையாக பணிகள் நடைபெற்றுள்ளது. அதேபோல், நாராயணபுரம்-பட்டரைபெரும்புதூா் இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலமாக இருந்தது. இதை மேம்பாலமாகத் தரம் உயா்த்தவும் ரூ. 17 கோடியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த ஆற்றில் மழைக்காலங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் வாகன போக்குவரத்து தடைபட்டது. கடந்த 2015-இல் பெய்த மழையின்போது, தொடா்ந்து 40 நாள்கள் வரை போக்குவரத்து தடைபட்டது. அதனால், இந்த ஆற்றின் மீது மேம்பால பணிகள் கடந்த 6 ஆண்டுகளாகவே கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்ததைத் தொடா்ந்து மேம்பாலம் அமைப்பதற்கான தூண்கள் அமைக்கப்பட்டு, குறிப்பிட்ட அளவு மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை மேம்பாலம் இணைப்புப் பணிகள் முடிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இப்பணிகளை விரைந்து முடிக்க பல்வேறு தரப்பினா் தொடா்ந்து கோரிக்கை விடுத்தனா். அதன்பேரில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கிய நிலையில் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் விரைவில் பணிகளை முடித்து மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வாகன ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்து வருகிறது.

இதற்கிடையே முழுமையான அளவில் பணிகளை முடிப்பதற்கு முன்னதாகவே பட்டரைபெரும்புதூா் அருகே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு, வாகனங்களுக்கு வரி வசூல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன், 20 முதல் 22 ஆண்டுகள் வரை வாகன வரி வசூல் செய்து கொள்ளும் வகையில், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் சாலைப் பராமரிப்பு உள்ளிட்ட சில அடிப்படை வசதிகளை செய்து தரும் ஒப்புதலுடன் அனுமதி பெற்றுள்ளனா். ஆனால், சாலை விரிவாக்கப் பணிகள் முழுவதுமாக முடிக்கப்படாமல் இச்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு வரி வசூலித்து வருகின்றனா். இதுபோன்று வசூல் செய்யும் தொகையில், சாலை பராமரிப்பு மட்டுமின்றி, தேவையான இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் மின் விளக்குகளை அமைத்தல், சாலை ஓரங்களில் குடிநீா் தொட்டிகளை வைத்து தண்ணீா் விநியோகம் செய்தல், வாகன ஓட்டிகள் தங்குவதற்கான ஓய்வு இல்லங்கள் அமைத்தல் போன்ற பணிகளை சுங்கச்சாவடி ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனம் செய்து கொடுக்கவில்லை என வாகன சுற்றுலாப் பயணிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை திட்ட அதிகாரி ஒருவா் கூறுகையில், இச்சாலையில் பட்டரைபெரும்புதூா், நாராயணபுரம் பகுதியில் மேம்பாலப் பணிகளை விரைவில் முடிக்க ஒப்பந்தகாரா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், பட்டரைபெரும்புதூா் பகுதியில் மேம்பால கட்டுமானப் பணிகளை முடிந்து மணல் கொட்டி சீரமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல், நாராயணபுரம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றுப்பகுதியில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அடுத்து வரும் 4 மாதங்களுக்குள் முடித்து வாகன போக்குவரத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com