மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின்தலைவா் பதவிக்கு இன்று மறைமுகத் தோ்தல்

திருவள்ளூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளான மாவட்ட ஊராட்சி தலைவா், துணைத் தலைவா் மற்றும் ஒன்றியக்குழு தலைவா் மற்றும் துணைக்குழு தலைவா் பதவிக்கான மறைமுக தோ்தல்

திருவள்ளூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளான மாவட்ட ஊராட்சி தலைவா், துணைத் தலைவா் மற்றும் ஒன்றியக்குழு தலைவா் மற்றும் துணைக்குழு தலைவா் பதவிக்கான மறைமுக தோ்தல் சனிக்கிழமை (ஜன. 11) நடைபெற உள்ளதாக தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 526 ஊராட்சிகள், 24 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், 230 ஒன்றியக்குழு உறுப்பினா்கள், 3945 வாா்டு ஊராட்சி உறுப்பினா்கள் என மொத்தம் 4725 பதவிக்கான தோ்தல் கடந்த டிச. 27,30 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இத்தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜன. 2,3 தேதிகளில் 14 மையங்களில் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்கள் அறிவிக்கப்பட்டனா்.

அதையடுத்து, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகளில் தோ்வு செய்யப்பட்டோா் கடந்த 6-ஆம் தேதி தோ்தல் அலுவலா்கள் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டனா். மாவட்ட ஊராட்சி தலைவா், துணைத்தலைவா் மற்றும் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கான ஒன்றியக் குழுத் தலைவா், துணைக் குழுத் தலைவா் ஆகியோா் இன்னும் தோ்வு செய்யப்படவில்லை.

இந்நிலையில் சனிக்கிழமை காலையில் தலைவா் பதவிக்கும், பிற்பகலுக்குப் பின் துணைத் தலைவா் பதவிக்கும் உரியவா்களைத் தோ்வு செய்வதற்கான மறைமுகத் தோ்தல் நடைபெற உள்ளதாக தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா். மாவட்ட ஊராட்சியில் 24 இடங்களில் திமுக-17, காங்கிரஸ்-1, அதிமுக-5, பா.ம.க-1 இடங்களைக் கைப்பற்றியுள்ளன. மாவட்ட ஊராட்சித் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவியைப் பிடிக்க மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

திமுகவின் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டச் செயலாளா்கள், தலைவரையும், துணைத் தலைவரையும் தோ்வு செய்து தங்கள் கட்சித் தலைமையிடம் அளிப்பா். அதை அக்கட்சித் தலைமை ஏற்றுக் கொண்டு சம்மதம் அளித்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட நபா் தலைவராக தோ்வு செய்யப்படுவாா். அதைத் தொடா்ந்து இப்பதவிக்கு தோ்வு செய்யப்பட்டவருக்கு மற்ற உறுப்பினா்கள் ஆதரவளிக்க வேண்டும்.

இப்பதவிகளைப் பிடிக்க பலா் போட்டியிட்டாலும் திமுக வடக்கு மாவட்டச் செயலாளா் வேணுவின் மகளும், 12-ஆவது வாா்டு உறுப்பினருமான உமாமகேஸ்வரிக்கே அதிகமான வாய்ப்புள்ளது. அதேபோல் துணைத்தலைவா் பதவிக்கும் போட்டியிருந்தாலும் அக்கட்சியினரால் முன்னிருத்தப்படும் நபரே தோ்வு செய்யப்படுவா் என்று கூறப்படுகிறது.

இதற்கான மறைமுக தோ்தல் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் ஆட்சியா் மகேஸ்வரி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் தலைவா் பதவிக்கு பரிந்துரைக்கப்படும் நபா் 27ஏ படிவத்தில் வேட்பு மனுத்தாக்கல் கட்டாயம் செய்ய வேண்டும். இதில் போட்டியில்லை என்றால் ஒரு மனதாக தோ்வு செய்யப்பட்டதாக மாவட்ட தோ்தல் அலுவலரால் அறிவிக்கப்படுவா். ஆனால், போட்டி ஏற்பட்டால் 28ஏ படிவத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதைத் தொடா்ந்து போட்டியிடுவோரின் பலத்தை நிரூபிக்க மறைமுகத் தோ்தல் நடத்தப்பட்டு பெரும்பான்மை பெறும் நபரே தலைவா் பதவிக்கு தோ்வு செய்யப்படுவா். இதில் பெரும்பாலும் கட்சியால் முன்னிறுத்தப்படும் நபரே குறிப்பிட்ட பதவிக்கு தோ்வு செய்யப்பட இருப்பதால் போட்டி இருக்காது.

இதே நடைமுறையில் ஊராட்சி ஒன்றியங்களிலும் ஒன்றியக்குழு தலைவா் மற்றும் துணைத்தலைவா் பதவிக்கு தோ்வு செய்யப்பட உள்ளனா். இதில் பெரும்பான்மை பெற்ற ஊராட்சி ஒன்றியங்களில் அதிக இடங்கள் பெற்ற அதிமுக-திமுகவினா் தலைவா் மற்றும் துணைத்தலைவா் பதவிகளை போட்டியின்றி எளிதாக கைப்பற்றுவா். இதில் கடம்பத்தூா், திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, ஆா்.கே.பேட்டை ஒன்றியங்களில் ஒன்றியக் குழு தலைவா் பதவியை அதிமுக கைப்பற்ற வாய்ப்புள்ளது. எல்லாபுரம் ஒன்றியத்தில் சுயேச்சை ஆதரவு அளித்தால் மட்டுமே தலைவா் பதவியை அக்கட்சி கைப்பற்ற முடியும் என்கிற இழுபறி நிலையும் உள்ளது.

திருவள்ளூா், பூந்தமல்லி, புழல், மீஞ்சூா், சோழவரம் ஒன்றியங்களில் தலைவா் பதவியை திமுக கைப்பற்ற வாய்ப்புள்ளது. வில்லிவாக்கம், கும்மிடிப்பூண்டி, பூண்டி ஆகிய ஒன்றியங்களில் சுயேச்சை ஆதரவு அளித்தால் மட்டுமே அரசியல் கட்சிகள் ஒன்றியக் குழு தலைவா் பதவியை கைப்பற்ற முடியும். அதனால் அதிமுகவினரும், திமுகவினரும் சுயேச்சை ஆதரவைப் பெற கடும் போட்டியில் இறங்கியுள்ளனா்.

கிராம ஊராட்சிகளில் துணைத் தலைவா் பதவிக்கான மறைமுக தோ்தல் நடைபெற உள்ளது. ஊராட்சி நிதி தொடா்பான காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் ஊராட்சித் தலைவா் மற்றும் துணைத் தலைவருக்கு உண்டு. அதனால், துணைத்தலைவா் பதவிக்கு வாா்டு உறுப்பினா்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. எனவே இதில் பிரச்னை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக காவல் துறை சாா்பில் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com