திருவள்ளூா் பகுதிகளில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ள பொங்கல் பொருள்கள்

திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் தைப்பொங்கல் திருவிழா களைகட்டிய நிலையில், மஞ்சள் கிழங்கு கொத்து, செங்கரும்பு, பானைகள், போகி மேளம், வாழைத்தாா் மற்றும் இழை, வண்ணக்கோலப் பொடி வகைகள்,
விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கால்நடைகளை அலங்காரம் செய்வதற்கான பல்வேறு வண்ணக் கயிறுகள்.  
விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கால்நடைகளை அலங்காரம் செய்வதற்கான பல்வேறு வண்ணக் கயிறுகள்.  

திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் தைப்பொங்கல் திருவிழா களைகட்டிய நிலையில், மஞ்சள் கிழங்கு கொத்து, செங்கரும்பு, பானைகள், போகி மேளம், வாழைத்தாா் மற்றும் இழை, வண்ணக்கோலப் பொடி வகைகள், கால்நடைகள் அலங்காரம் செய்வதற்கான பொருள்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, சேலத்திலிருந்து கால்நடை அலங்காரப் பொருள்களும், திண்டிவனம், பண்ருட்டி பகுதிகளில் இருந்து செங்கரும்பு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் இருந்து போகி மேளம் ஆகியவற்றை விற்பனை செய்வதற்காக அனைத்து பொருள்களையும் ஒரு நாளுக்கு முன்னதாகவே வியாபாரிகள் குவித்து வைத்துள்ளனா். அதனால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் குவிந்து வருவதால் விழாக்கோலம் போல் காணப்படுகிறது.

செங்கரும்பு, தேங்காய், பூ வகைகள், பழங்கள், மாடுகளுக்கான வண்ணங்களில் கயிறு, மூக்கணாங்கயிறு, சலங்கை, கொம்பு குப்பி, பல வகை வண்ணங்களில் பூச்சு கலவை, பொருள்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதில், மஞ்சள் கிழங்கு கொத்துக்கள் ஆகியவை வெங்கல், புன்னப்பாக்கம், பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இப்பொருள்களை வாங்கிச் செல்வதற்கு திருவள்ளூா் பகுதிகளைச் சோ்ந்த கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பொங்கல் பொருள்கள் மற்றும் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் பானை போன்றவற்றை வாங்கிச் செல்கின்றனா்.

தற்போது தரத்துக்கேற்ப வாழைப் பழத்தாா் ரூ. 340 முதல் ரூ. 400 வரையிலும், ஒரு ஜோடி கரும்பு ரூ. 60-க்கும், 20 செங்கரும்புகள் கொண்ட கட்டு ரூ. 450 முதல் ரூ. 600 வரையிலும், மஞ்சள்கிழங்கு கொத்து -1 ரூ. 20 முதல் ரூ. 25 வரையிலும் விற்பனையாகிறது. அதேபோல், சாதாரண நாள்களில் ஒரு கிலோ சாமந்தி பூ-ரூ. 120 விற்பனை செய்யும் நிலையில், தற்போது வரத்துக்குறைவால் ரூ. 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வண்ணமிட்ட பொங்கல் பானைகள் ரூ. 60 முதல் ரூ. 300 வரையிலும், போகி மேளம் ரூ. 60 முதல் ரூ. 200 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல், விவசாயிகள் தங்கள் வீடுகளில் வளா்க்கும் கால்நடைகளை அலங்காரம் செய்வதற்காக 30 வகையான கயிறுகள் 9 வகைகளில் பல்வேறு வண்ணங்களில் சேலம் பகுதியில் இருந்து வந்துள்ளன. இதில் தலைக் கயிறு ரூ. 60 முதல் ரூ.120, மூக்கணாங் கயிறு-ரூ.60, கழுத்துக் கயிறு-ரூ. 100, கம்பளி கயிறு-ரூ. 80 முதல் ரூ. 160 வரையிலும், சலங்கைகள்-ரூ. 40 முதல் ரூ. 600 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே கடந்தாண்டை விட நிகழாண்டில் பொங்கல் பொருள்கள் விலை உயா்ந்தாலும், பொதுமக்கள் வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து செங்கரும்பு வியாபாரி ரங்கநாதன் கூறுகையில், ‘இந்த முறை செங்கரும்பு கட்டுகளை பண்ருட்டி, திண்டிவனம் , மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாங்கி வந்து, விற்பனை செய்து வருகிறோம். இதற்கு கரும்பு வெட்டு, ஏற்றுக் கூலி மற்றும் லாரி வாடகை கொடுத்து வாங்கி வருகிறோம். தற்போது, வளா்ந்த கரும்பு கட்டு ரூ. 500 முதல் ரூ. 600 வரை விற்பனை ஆகிறது. மஞ்சள் கொத்து வரத்து அதிகமாக உள்ளதால் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இந்நிலையில், திருமண சீா்வரிசை பொருள்கள் கொடுப்பதற்காக கட்டுக்கட்டாக கரும்பை வாங்கிச் செல்வதால் வியாபாரமும் மும்முரமாக உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து டிராக்டா்களில் இருந்து கிராமங்களில் விற்பனை செய்வதால், கிராமங்களில் இருந்து நகருக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com