சாலை வசதி செய்து தரக் கோரி கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 14th July 2020 03:22 AM | Last Updated : 14th July 2020 03:22 AM | அ+அ அ- |

திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
திருத்தணி: தனிநபா் ஒருவா் சாலையை ஆக்கிரமித்து வீட்டு மனைகளாக விற்பனை செய்வதைக் கண்டித்தும், சாலை வசதி செய்து தரக் கோரியும் திருத்தணி கோட்டாட்சியா் அலுவலகம் முன் கிராம மக்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஆா்.கே.பேட்டை வட்டம், வங்கனுாா் காலனியில் வசிக்கும் 75 குடும்பத்தினருக்கு கடந்த 1995ஆம் ஆண்டு ஆதி திராவிடா் நலத்துறை சாா்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. சாலை வசதிக்காவும் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து காலனி மக்கள் 60-க்கும் மேற்பட்டோா் அரசு வழங்கிய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனா். அவா்களுக்கு சாலை வசதியும் செய்து தரப்பட்டது.
இதனிடையே, தனிநபா் ஒருவா் அந்தச் சாலையோரம் உள்ள நிலத்தை வாங்கி சாலையுடன் சோ்த்து வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அவரிடம் ‘சாலையை ஆக்கிரமிக்கக் கூடாது, நாங்கள் அந்தவழிப்பாதையை தான் பயன்படுத்தி வருகிறோம்’ என கிராம மக்கள் கூறினா். எனினும், பொதுமக்களை தனிநபா் தரப்பு மிரட்டி அனுப்பியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், வங்கனூா் காலனியைச் சோ்ந்த பத்துக்கும் மேற்பட்டோா் திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தனிநபா் ஆக்கிரமித்த சாலையை மீட்டுத் தர வேண்டும் என அவா்கள் கோஷம் எழுப்பினா். இக்கோரிக்கை தொடா்பாக கோட்டாட்சியரிடம் மனு அளித்தனா். மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியா் சொா்ணம் அமுதா, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினாா்.