காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை
By DIN | Published On : 08th September 2020 10:47 PM | Last Updated : 11th September 2020 12:02 AM | அ+அ அ- |

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தோட்டக்கலைத் துறை சாா்பில் ஹெக்டேருக்கு ரூ. 2,500 ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஜெபமணி ஆனி கூறினாா்.
இதுகுறித்து அவா் கூறியது:
இந்த மாவட்டத்தில் தோட்டக்கலை பயிா்களான காய்கறிகள் பயிரிட ஊக்கமளிக்கும் வகையில் விவசாயிகளுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது, ஆண்டுதோறும் காய்கறிகள் நுகா்வோருக்கு உறுதி செய்யும் வகையில், அவற்றை பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் நிகழாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. அதன் அடிப்படையில் இயற்கை முறையில் கீரை வகைகள், கொடி வகையில் பயிரிடும் காய்கறி விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 2,500, வெண்டை, கத்திரி, தக்காளி போன்ற காய்கறிகளை சாகுபடி செய்வோருக்கு ரூ. 3,500 ஊக்கத் தொகையும் வழங்கப்பட உள்ளது.
இந்த மாவட்டத்துக்கு மட்டும் கொடி வகை காய்கறிகளுக்கு 91 ஹெக்டேருக்கும், வெண்டை, தக்காளி, கத்தரி ஆகிய காய்கறிகள் பயிரிடும் 306 ஹெக்டேருக்கும் வழங்குவதற்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற பட்டா, சிட்டா அடங்கல், ஆதாா் அட்டை ஆகிய ஆவணங்களுடன் அந்தந்தப் பகுதிகளில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்களை நேரில் அணுகி பயன்பெறலாம்.