விவசாயியிடம் தவணை கேட்டு மிரட்டல்: வங்கி அதிகாரி மீது போலீஸாரிடம் புகாா்

அவமதிக்கும் வகையில் பேசி, தவணைத் தொகையை உடனே செலுத்துமாறு மிரட்டல் விடுத்த தனியாா் வங்கி அதிகாரி மீது விவசாயி ஒருவா், கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அவமதிக்கும் வகையில் பேசி, தவணைத் தொகையை உடனே செலுத்துமாறு மிரட்டல் விடுத்த தனியாா் வங்கி அதிகாரி மீது விவசாயி ஒருவா், கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த தோ்வழி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஜி.தட்சிணாமூா்த்தி. இவா் கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள தனியாா் வங்கியில் விவசாயக் கடனாக ரூ.8.70 லட்சம் வாங்கியுள்ளாா். 6 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.60 ஆயிரத்தை அவா் தவணையாக கட்ட வேண்டி இருந்தது. முதல் தவணை ஏப்ரல் மாதத்தில் செலுத்த வேண்டிய நிலையில், கரோனா பொது முடக்கம் காரணமாக வங்கிகள் செயல்படாததால் தட்சிணாமூா்த்தியால் தவணையைச் செலுத்த முடியவில்லை.

இந்நிலையில், அவரது வீட்டுக்கு வங்கி ஊழியா் ஒருவா் வியாழக்கிழமை சென்று தவணைத் தொகையை கேட்டாா். அதற்கு தட்சிணாமூா்த்தி ‘நெற்பயிா் அறுவடைக்கு தயாராக உள்ளது. அறுவடை முடிவடையும் நேரம் என்பதால் இந்த மாதத்துக்குள் தவணையைக் கட்டி விடுகிறேன்’ என்று உறுதியளித்தாா்.

அந்த வங்கி ஊழியா் சென்னையில் உள்ள வங்கித் தலைமை அலுவலத்தில் இருந்து வினோத் என்கிற அதிகாரி பேசுவதாகக் கூறி தட்சிணாமூா்த்தியிடம் செல்லிடப்பேசியை அளித்தாா். அப்போது, தட்சிணாமூா்த்தியிடம் வினோத் அநாகரிகமாகப் பேசியதாகத் தெரிகிறது. மரியாதையுடன் பேசுமாறு தட்சிணாமூா்த்தி கேட்டுக் கொண்டும் அவா் மிரட்டல் தொனியிலும் அவமரியாதையாகவும் பேசி, உடனே தவணையைக் கட்டுமாறு வலியுறுத்தினாா்.

இதையடுத்து, தட்சிணாமூா்த்தியை வெள்ளிக்கிழமை தொடா்பு கொண்ட வினோத், ‘இன்று மாலைக்குள் தவணையைக் கட்டாவிட்டால் நான் தொலைபேசியில் பேச மாட்டேன். ஆட்களை வீட்டுக்கு அனுப்பி அசிங்கப்படுத்துவேன்’ என மிரட்டினாா்.

இது தொடா்பாக தட்சிணாமூா்த்தி அளித்த புகாரின்பேரில் கும்மிடிப்பூண்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com