இளைஞா் கொலைச் சம்பவம்: விசாரணை நடத்த தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

காதல் திருமணம் செய்த இளைஞா் கெளதமன் ஆவணக் கொலை சம்பவத்துக்கு நீதி கிடைக்கும் வகையில் உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில்

காதல் திருமணம் செய்த இளைஞா் கெளதமன் ஆவணக் கொலை சம்பவத்துக்கு நீதி கிடைக்கும் வகையில் உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், ஆரணி அருகே காரணி கிராமத்தில், பட்டியலினப் பெண்ணை காதலித்துத் திருமணம் செய்த கெளதமன் அண்மையில் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, திருவள்ளூா் எம்ஜிஆா் சிலை முன்பு திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்குப் பின்னா், திருமாவளவன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காரணி கிராமத்தைச் சோ்ந்த பட்டியலினப் பெண் அமலுவை திருமணம் செய்த கெளதமனுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. பெற்றோா் வீட்டுக்கு அண்மையில் சென்ற கெளதமை, ஆணவ படுகொலை செய்துள்ளனா். அதோடு, மனைவிக்கு தெரியாமல் சடலத்தையும் எரித்து தகனம் செய்து அழித்தனா். காவல் நிலையத்தில் புகாா் செய்த நிலையிலும் போலீஸாா் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த வழக்கை உயா்நீதிமன்ற நீதிபதி மேற்பாா்வையில் இயங்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைத்து சிறப்பு விசாரணை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

இனி வருங்காலத்தில் இதுபோன்ற ஆணவப் படுகொலையை நடைபெறாமல் தடுக்கும் வகையில், அரசு சட்டம் இயற்ற வேண்டும். மேலும், ஆணவக் கொலையை தற்கொலை எனக்கூறி மூடிமறைத்த காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்து சிபிஐ மூலம் விசாரணை மேற்கொள்ளவும் வலியுறுத்துவோம் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் நிா்வாகிகள் சித்தாா்த்தன், கோபி நயினாா், நீலவானத்து நிலவன், பாலசிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com