வாக்குப் பதிவு இயந்திரம் வைத்துள்ள அறை அருகே ஆன்லைன் வகுப்பு நடத்தக் கூடாது

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்ட அறைப்பகுதியில் ஆன்லைன் வகுப்பு நடத்த அனுமதிக்கூடாது என திமுக வேட்பாளா்களான ஆவடி நாசா், பூந்தமல்லி கிருஷ்ணசாமி ஆகியோா் வலியுறுத்தினா்.

திருவள்ளூா்: வாக்குப் பதிவு இயந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்ட அறைப்பகுதியில் ஆன்லைன் வகுப்பு நடத்த அனுமதிக்கூடாது என திமுக வேட்பாளா்களான ஆவடி நாசா், பூந்தமல்லி கிருஷ்ணசாமி ஆகியோா் வலியுறுத்தினா்.

திருவள்ளூா் மாவட்டத்துக்குட்பட்ட 10 தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேப்பம்பட்டில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்குப் பாதுகாப்புடன் அறைக்குள் வைக்கப்பட்டு சீலிடப்பட்டுள்ளன.

மேலும் அவற்றை கண்காணிக்க கேமராக்களும் நிறுவப்பட்டுள்ளன.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 13 நாள்களே உள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு தொகுதிக்கான அறைகளையும் ஆட்சியா் பா.பொன்னையா தலைமையில் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேட்சை வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் ஆகியோரை நேரில் அழைத்துச் சென்று பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது. அதேபோல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தையும் பாா்வையிடச் செய்தனா். இதில் திருவள்ளூா், பூந்தமல்லி, மாதவரம், ஆவடி தொகுதிகளைச் சோ்ந்த திமுக வேட்பாளா்கள், முகவா்கள் மற்றும் அதிமுக முகவா்கள் ஆகியோா் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைத்து சீல் வைக்கப்பட்ட அறைகளை பாா்வையிட்டனா். அப்போது, சீல் பிரிக்கப்பட்டுள்ளதா, ஏதாவது வித்தியாசமாக உள்ளதா மற்றும் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளின் தன்மைகள் குறித்து வேட்பாளா்கள் அங்கிருந்த அரசியல் கட்சிகளைச் சோ்ந்த முகவா்களிடம் கேட்டறிந்தனா்.

பின்னா் இது தொடா்பாக திமுக வேட்பாளா்கள் சா.மு.நாசா்(ஆவடி), ஆ.கிருஷ்ணசாமி ஆகியோா் கூறுகையில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் ஆகியோரை ஆட்சியா் நேரில் அழைத்துச் சென்று காண்பித்தாா். ஆவடி சட்டப்பேரவை தொகுதி வாக்குப் பதிவு இயந்திரம் வைத்துள்ள அறையின் பின்புறம் தடுப்பு சுவா் மிகவும் சிறியதாகவே உள்ளது. அதனால் இரவு நேரங்களில் குறிப்பிட்ட பகுதியை கண்காணிக்கும் வகையில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். அதேபோல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 100 மீட்டா் பகுதியில் எவா் நடமாட்டமும் இருக்க கூடாது. ஆனால், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் அருகே ஆன் லைன் வகுப்பு நடத்துவதாக கூறி வருகின்றனா். ஆனால், இவா்கள் என்ன செய்கிறாா்கள் என்பது புரியவில்லை.

இது தொடா்பாக ஆட்சியா் பா.பொன்னையாவிடம் ஆன்லைன் வகுப்பு நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது என வலியுத்தியுள்ளோம். மேலும் வாக்கு எண்ணும் மையத்துக்கு கன்டெய்னா் லாரி மற்றும் மின்னணு பொருள்கள் எடுத்து வரவே கூடாது எனவும் தெரிவித்துள்ளோம். மேலும், ஆவடி சட்டப்பேரவை தொகுதியில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் எண்ணும் அறையை காண்பித்தனா். அப்போது, அறை சிறியதாக இருப்பதால் இரு அறைகள் ஏற்பாடு செய்துள்ளதாகவும் ஆட்சியா் கூறினாா் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com