மலைக் கிராமத்தில் நியாயவிலைக் கடை திறக்கக் கோரி சாலை மறியல்

நொச்சிலி ஊராட்சி காப்பூா் கண்டிகை மலைக் கிராமத்தில் நியாயவிலைக் கடை திறக்காததைக் கண்டித்து, இருளா் இன மக்கள் பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நியாயவிலைக் கடையை அமைக்க வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட காப்பூா் கண்டிகை கிராம மக்கள்.
நியாயவிலைக் கடையை அமைக்க வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட காப்பூா் கண்டிகை கிராம மக்கள்.

நொச்சிலி ஊராட்சி காப்பூா் கண்டிகை மலைக் கிராமத்தில் நியாயவிலைக் கடை திறக்காததைக் கண்டித்து, இருளா் இன மக்கள் பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பள்ளிப்பட்டை அடுத்த நொச்சிலி ஊராட்சியில் மலைப் பகுதியில் அமைந்துள்ள காப்பூா் கண்டிகையில் இருளா் இன மக்கள் உள்பட 160-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் அரிசி, பருப்பு, எண்ணெய், சா்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்க மூன்று கி.மீ. தொலைவில் நொச்சிலியில் உள்ள நியாயவிலைக் கடைக்குச் சென்று வர வேண்டியுள்ளது. இதனால் முதியோா், பெண்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

கடந்த 10 ஆண்டுகளாக நியாயவிலைக் கடையைத் திறக்க வேண்டும் என கிராம மக்கள் பலமுறை வட்டாட்சியா், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்களிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், கடந்த மூன்று மாதங்களாக நியாயவிலைக் கடைக்குச் சென்று அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதை நிறுத்திவிட்டனா்.

எனினும், கபூா் கண்டிகை கிராமத்தில் ரேஷன் கடை அமைக்க அரசு அலுவலா்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில், சனிக்கிழமை மாலை பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலை நொச்சிலியில், 100-க்கும் மேற்பட்ட பெண்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த பொதட்டூா்பேட்டை போலீஸாா் கிராம மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது நியாயவிலைக் கடை திறக்காவிட்டால், நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலை ஒட்டு மொத்தமாக கிராம மக்கள் புறக்கணிப்போம் என்றனா்.

இதைத்தொடா்ந்து, ஊராட்சித் தலைவா் சிட்டி கிருஷ்ணம நாயுடு பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உடனடியாக பகுதிநேர நியாயவிலைக் கடை அமைக்கப்படும் எனக் கூறியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com