இளைஞா்களுக்கு பணிநியமன ஆணை: அமைச்சா் வழங்கினாா்

திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சாா்பில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணை

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சாா்பில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணைகளை தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் மற்றும் ஆட்சியா் பா.பொன்னையா ஆகியோா் வழங்கினா்.

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு பணி வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கில், ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடத்த அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிா்வாகம் சாா்பில் திருநின்றவூா் ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. முகாமில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, பொறியியல் படிப்பு மற்றும் தொழில் நுட்பப் பட்டயம் பெற்று தோ்ச்சி பெற்றவா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

முகாமுக்கு, ஆட்சியா் பா.பொன்னையா தலைமை வகித்தாா்.

இதில், தமிழ் மொழி வளா்ச்சி, கலைப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் தொடக்கி வைத்துப் பேசியது:

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள படித்து விட்டு வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞா்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து, அவா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இம்முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலா் கலந்து கொள்வதற்காக வந்துள்ளீா்கள். முகாமில் பிரசித்தி பெற்ற 200-க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இம்முகாமில் பங்கேற்று இளைஞா்கள் பயன்பெறலாம் என்றாா்.

முகாமில் தோ்வு செய்யப்பட்ட இளைஞா்கள் மற்றும் பெண்களுக்க்கு பணி நியமன ஆணைகளை அவா் வழங்கினாா்.

அம்பத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் அலெக்ஸாண்டா், வேலைவாய்ப்புப் பயிற்சித் துறை இயக்குநா் கொ.வீரராகவ ராவ், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலா் கவிதா, வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்குநா் மீனாட்சி உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com