ஹிந்துக்களுக்கு திமுக என்றுமே விரோதி அல்ல: மு.க.ஸ்டாலின்

‘ஹிந்துக்களுக்கு திமுக என்றுமே விரோதி கிடையாது’ என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

‘ஹிந்துக்களுக்கு திமுக என்றுமே விரோதி கிடையாது’ என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மத்திய மாவட்ட திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா ஆவடி, கோணாம்பேடு கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்டச் செயலாளா் ஆவடி சா.மு.நாசா் தலைமை வகித்தாா். பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி வரவேற்புரை வழங்கினாா்.

விழாவில், மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசியது:

தை பிறந்தால், கட்டாயம் வழி பிறக்கப் போகிறது. இதைத் தக்க வைக்கும் நோக்கில் பொதுமக்களாகிய நீங்கள் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளீா்கள்.

அதைப் பறைசாற்றும் வகையில், கோயில் பக்கத்திலேயே மேடை அமைத்து நான் பேசுகிறேன். பாஜக, ஆா்எஸ்எஸ் உள்ளிட்ட மதவாத அமைப்புகள் என்னதான் இடையூறு செய்தாலும், திமுக என்றுமே ஹிந்துக்களுக்கு எதிரி அல்ல. அந்த அமைப்புகள் திட்டமிட்டு, வேண்டுமென்றே பொய்ப் பிரசாரம் செய்தாலும், அது பொதுமக்களிடம் ஒருபோதும் எடுபடாது.

மத்திய பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு மக்களவையில் திமுக உறுப்பினா்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். மாறாக, விவசாயிகளை பாதிக்கும் என்று தெரிந்தும் அந்தச் சட்டங்களுக்கு அதிமுகவினா் ஆதரவளித்து வருகின்றனா். இதை மாற்றும் வகையில், அடுத்த 4 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வரப் போகிறது.

முன்னாள் முதல்வா் கருணாநிதி எவ்வாறு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தாரோ, அதேபோல் நானும் விவசாயிகள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கே முதல் கையெழுத்திடுவேன். மேலும், பொதுமக்கள் 5 சவரன் வரை வைத்து வாங்கிய நகைக் கடனையும் முழுமையாக ரத்து செய்வேன் என்றாா் அவா்.

இதையடுத்து, தமிழா் பாரம்பரிய முறையில் மு.க.ஸ்டாலின் பெண்களுடன் பொங்கல் வைத்தாா். அதன் பின், பொய்க்கால் குதிரை, சிலம்பாட்டம் மற்றும் கிராமியக் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com