கோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சித்த வாலிபர் காவல்நிலையத்தில் ஒப்படைப்பு
By DIN | Published On : 29th January 2021 10:39 AM | Last Updated : 30th January 2021 07:43 AM | அ+அ அ- |

கோவிலில் திருட வந்து பிடிபட்ட திருடன்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பஜார் பகுதியில் அமைந்துள்ள கருமாரியம்மன் கோவில் உண்டியலை வெள்ளிக்கிழமை அதிகாலை உடைக்க முயன்ற 3 வாலிபர்களை அப்பகுதியைச் சேர்ந்த தேமுதிக பிரமுகர் எஸ்.பி.டி.ராஜேந்திரன், அவரது சகோதரர் உள்ளிட்ட 4 பேர் விரட்டிச் சென்று திருடர்களில் ஒருவனை பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் செக்குமேடு பகுதியில் கருமாரியம்மன் கோவில் உள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை அந்த கோவிலின் உண்டியலை மர்ம நபர்கள் உடைத்தனர்.
சத்தம் கேட்டு கோவிலின் பக்கத்து வீட்டில் வசிக்கும் தேமுதிக பிரமுகர் எஸ்.பி.டி.ராஜேந்திரன், அவரது சகோதரர் செல்வகுமார், அவரது வீட்டில் குடியிருக்கும் ரகு, தினேஷ் ஆகிய 4 பேரும் கோவிலில் உண்டியலை உடைக்க முயன்ற அந்த 3 திருடர்களை பிடிக்க ஓடினர்.
தங்களை பிடிக்க ஆள்கள் வருவதை அறிந்த மூன்று திருடர்களும் ஓட்டம் பிடிக்க, தேமுதிக பிரமுகர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் அவர்களை விரட்டிச் சென்றனர். அதில் ஒரு திருடன் தவறி கீழே விழுந்த போது அவனை மடக்கி பிடித்தனர். இந்த சம்பவத்தில் பிடிபட்ட திருடனுக்கு தலையில் காயமும், திருடனை பிடிக்க முயற்சித்ததில் தேமுதிக பிரமுகர் உள்ளிட்ட 4 பேருக்கும் சிராய்ப்புகள் முள்புதரில் இருந்த முள் கிழித்ததில் உடலில் ரத்த காயமும் ஏற்பட்டது.
இந்த சம்பவத்திர் மற்ற இருவரும் தப்பி ஓடினர். தொடர்ந்து பிடிபட்ட நபரை ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த உசைன் (22) என்பது தெரியவந்தது
தொடர்ந்து ஆரம்பாக்கம் போலீஸாா் பிடிபட்ட நபரின் காயத்திற்கு சிகிச்சை அளித்து அவரிடம் தப்பியோடிய வேறு இருவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே கருமாரியம்மன் கோவிலில் ஏற்கெனவே இரண்டு முறை திருட்டு சம்பவம் நடந்துள்ளதும், தற்போது ஒரு திருடனை பிடித்த கோவில் அருகே வசிக்கும் தேமுதிக பிரமுகர் எஸ்.பி.டி.ராஜேந்திரன் வீட்டில் ஓராண்டுக்கு முன்பு 70 சவரன் நகை திருடு போனதும் இதுவரை நகைகள் மீட்கப்படாததும் குறிப்பிடத்தக்கது.