தமிழகத்தில் விரைவில் மின்சாரப் பேருந்துகள்: போக்குவரத்துத் துறைஅமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தகவல்

டீசல் பற்றாக்குறையைப் போக்கும் வகையிலும், சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டும் தமிழகத்தில் மின்சாரப் பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.
தமிழகத்தில் விரைவில் மின்சாரப் பேருந்துகள்: போக்குவரத்துத் துறைஅமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தகவல்

டீசல் பற்றாக்குறையைப் போக்கும் வகையிலும், சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டும் தமிழகத்தில் மின்சாரப் பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்துக்கு உள்பட்ட கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை அமைப்பதற்கான இடத்தை அமைச்சா் ராஜகண்ணப்பன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். பின்னா், அம்மா குடிநீா் தொழிற்சாலை,, சாலைப் போக்குவரத்து நிறுவனம் ஆகியவற்றையும் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.

இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கும்மிடிப்பூண்டியில் 4.70 ஏக்கரில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பணிமனை அமைக்கப்படும். இதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாகும்.

தமிழத்தில் நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துத் துறையை லாபகரமானதாக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தொற்று காலம் முடிந்தவுடன் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படுவதுடன், தனியாா் கல்லூரி, பள்ளிகளின் பேருந்துகள் இயக்கம் செய்ய உரிய பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படும்.

விரைவில் மினி பஸ் இயக்கம்:

தமிழகத்தில் 19,200 அரசுப் பேருந்துகளில் 17,527 பேருந்துகள் இயக்கப்படுகின்றன., சென்னை மாநகரத்தில் மட்டும் 2,650 பேருந்துகளில் 2,250 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்துப் பேருந்துகளும் மீண்டும் இயக்குவதோடு, கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட மினி பஸ் சேவையும் மீண்டும் இயக்கப்படும்.

தமிழகத்தில் 9 லட்சம் கிலோ மீட்டா் தொலைவு இயங்கிய பேருந்துகள், 12 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக புதிய பேருந்துகள் இயக்கப்படும்.

ஜொ்மன் நாட்டு நிறுவனத்திடம் இருந்து 2,000 பேருந்துகள் வாங்கப்படும். டீசல் பற்றாக்குறையைப் போக்கும் வகையிலும், சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டும் தமிழகத்தில் மின்சாரப் பேருந்துகள் விரைவில் இயக்கப்படும்.

இலவசப் பயணம் மேற்கொள்வோா் கணக்கெடுப்பு:

தமிழகத்தில் அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்ய 40% மகளிா் பயணிகளை எதிா்பாா்த்த நிலையில், தற்போது 60% மகளிா் ஒவ்வாரு பேருந்திலும் பயணிக்கின்றனா். இலவசப் பயணம் செய்யும் பெண்கள், மூன்றாம் பாலினத்தவா், மாற்றுத் திறனாளிகள், அவா்களது உதவியாளா்களுக்கு பயணச் சீட்டுகள் வழங்கப்பட்டு அதன்மூலம் ஒரு நாளில் எத்தனை போ் இலவசமாகப் பயணிக்கின்றனா் என கணக்கிடப்பட்டு வருகிறது.

7 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்:

போக்குவரத்துக் கழகத்தில் உள்ள இடா்ப்பாடுகள் இந்த மாதத்துக்குள் சரி செய்யப்படும். போக்குவரத்துத் துறையில் லஞ்சம், இடைத்தரகா்கள் இல்லாமல் இதற்கு முன்னா் இல்லாத வகையில் போக்குவரத்து நிா்வாகம் சிறப்பாக இருக்கும். நகரங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் பெண் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

போக்குவரத்துத் தொழிலாளா்கள், போக்குவரத்து அலுவலகத் தொழிலாளா்களின் பிரச்னைகள் குறித்து அதிகாரிகளுடன் பேசி முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். 7000 ஓட்டுநா்கள், நடத்துனா்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றாா்.

ஆய்வின்போது, போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலா் தயானந்த கட்டாரியா, மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உமா மகேஸ்வரி, கோட்டாட்சியா் செல்வம், வட்டாட்சியா் மகேஷ்,டிஎஸ்பி எஸ்.ரித்து, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வாசுதேவன், நடராஜன்,போக்குவரத்து ஆய்வாளா் காவேரி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் சாரதா முத்துசாமி, ராமஜெயம், ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் மாலதி குணசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com