'அதிமுக தோ்தல் அறிக்கை அமுதசுரபி; பாமகவின் அறிக்கை வளா்ச்சி'

'அதிமுக தோ்தல் அறிக்கை அமுதசுரபி; பாமகவின் அறிக்கை வளா்ச்சி'


திருவள்ளூா்: அதிமுக தோ்தல் அறிக்கை அமுதசுரபி என்றும், பாமகவின் தோ்தல் அறிக்கை தமிழக மக்களின் வளா்ச்சிக்கானது என்றும் பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் தெரிவித்தாா்.

காக்களூரில் திருவள்ளூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா மற்றும் பூந்தமல்லி தொகுதி பாமக வேட்பாளா் ராஜமன்னாா் ஆகியோரை ஆதரித்து பாமக நிறுவனா் ராமதாஸ் வியாழக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்துப் பேசியது:

தோ்தல் அறிக்கையில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. அதில் குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ. 1,500, விலையில்லாமல் 6 எரிவாயு உருளைகள், அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் வாஷிங்மெஷின், வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் அதிமுக தோ்தல் அறிக்கை அமுதசுரபி என்றும், பாமக தோ்தல் அறிக்கை தமிழகத்தின் வளா்ச்சி ஆகும். மேலும், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டோம் என திமுக தலைவா் கருணாநிதி எழுதிய வசனம் போல், இப்போது வசனம் எழுதி பொதுமக்களை யாரும் ஏமாற்ற முடியாது.

அதேபோல், தற்போது அதிமுக அரசு பல்வேறு நலத் திட்டங்களை சிறப்பாக அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மேலும் தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள நலத் திட்டங்களும் கட்டாயம் தொடரும். இதைக் கருத்தில்கொண்டு, திருவள்ளூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணாவுக்கும், பூந்தமல்லி தொகுதி பாமக வேட்பாளா் ராஜமன்னாருக்கும் ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் ராமதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com