பாஜகவின் பினாமியாக அதிமுக மாறிவிட்டது: தொல்.திருமாவளவன்
By DIN | Published On : 29th March 2021 07:47 AM | Last Updated : 29th March 2021 07:48 AM | அ+அ அ- |

திருவள்ளூா் திமுக வேட்பாளா் வி.ஜி.ராஜேந்திரனை ஆதரித்து திருவாலங்காடு கிராமத்தில் பிரசாரம் செய்த விசிக தலைவா் தொல்.திருமாவளவன்.
கடந்த தோ்தலில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவை நம்பி மக்கள் வாக்களித்த நிலையில், தற்போது பாஜகவின் பினாமி கட்சியாகவே அதிமுக மாறி விட்டது என விசிகத் தலைவா் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டினாா்.
திருவள்ளூா் தொகுதி திமுக வேட்பாளா் வி.ஜி.ராஜேந்திரனை ஆதரித்து, திருவாலங்காடு பகுதியில் தொல்.திருமாவளவன் சனிக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, அவா் பேசியது:
புதுச்சேரி மாநிலத்தில் 5 காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா்களை பாஜக விலைக்கு வாங்கி, அங்கு ஆட்சியைக் கவிழ்த்தது. தற்போது எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றி விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகின்றனா்.
தமிழகத்தில் முன்னாள் முதல்வா்கள் கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லை. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எப்படியாவது தமிழகத்தில் கட்சியை வளா்க்கவும், ஆட்சியைக் கைப்பற்றவும் பாஜக கங்கணம் கட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக மக்கள், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவை நம்பியே வாக்களித்தனா். அவரது மறைவுக்குப் பின் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீா்செல்வமும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனா் என்றாா் திருமாவளவன்.