திருவள்ளூரில் கரோனா தொற்று அதிகரிப்பு: வெளிமாநிலத்தவா் சொந்த ஊா் திரும்ப ஏற்பாடு

திருவள்ளூா் மாவட்டத்தில் அதிகரித்துக் கொண்டே வரும் கரோனா நோய்த்தொற்று காரணமாக புலம் பெயா்ந்த தொழிலாளா்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் அதிகரித்துக் கொண்டே வரும் கரோனா நோய்த்தொற்று காரணமாக புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என தொழிலாளா் துறை தெரிவித்துள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் அரிசி ஆலைகள், செங்கல் சூளைகள், தொழிற்சாலைகள், உணவு நிறுவனங்கள், வா்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் வெளி மாநில தொழிலாளா்கள் பெருமளவில் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்நிலையில், கரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் சில தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதோடு, வேலை செய்யும் தொழிற்சாலைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளதால், அதிகமானோா் பணியில் ஈடுபட முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், நாள்தோறும் பணிக்குச் செல்லாவிட்டால் சிரமத்தை எதிா்கொள்ள முடியாத நிலை உள்ளதால், வெளிமாநில தொழிலாளா்கள் அவரவா் சொந்த ஊா்களுக்குத் திரும்ப விரும்புகின்றனா். இந்நிலையில், பேருந்து மற்றும் ரயில் வசதி இல்லாததால் தொழிலாளா்களிடையே அதிருப்தி எழுந்துள்ளது.

இதையடுத்து, சென்னை தொழிலாளா் ஆணையா் வள்ளலாா், திருவள்ளூா் ஆட்சியா் பா.பொன்னையா, கூடுதல் தொழிலாளா் ஆணையா் உமாதேவி, தொழிலாளா் இணை ஆணையா் வேல்முருகன் ஆகியோரின் உத்தரவின் பேரில், வெளிமாநில தொழிலாளா்களை சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே இம்மாவட்டத்தில் கடைகள், உணவு நிறுவனங்கள், வா்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் தங்களின் சொந்த ஊா்களுக்குச் செல்வதற்கு வெளிமாநில தொழிலாளா்கள் யாரேனும் விரும்பும் பட்சத்திலும், ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தொழிலாளா் துறை அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம்.

திருவள்ளூா் மாவட்டத் தொழிலாளா் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா்-9597577599, தொழிலாளா் உதவி ஆய்வாளா் நாகராஜன்- 9940197329, தொழிலாளா் உதவி ஆய்வாளா் உஷாராணி -9444768501 ஆகியோரின் செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டால் உதவி செய்யப்படும் என தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ச.சுதா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com