சென்னை பெர்ரஸ் இரும்பு உருக்காலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி அடுத்த நாகராஜகண்டிகை பகுதியில் சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறி அப்பகுதியில் செயல்படும் சென்னை பெர்ரஸ் என்கிற தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

கும்மிடிப்பூண்டி அடுத்த நாகராஜகண்டிகை பகுதியில் சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறி அப்பகுதியில் செயல்படும் சென்னை பெர்ரஸ் என்கிற தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி நாகராஜகண்டிகை பகுதியில் சென்னை பெர்ரஸ் என்கிற இரும்பு உருக்காலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இரும்பை உருக்க தினமும் பல டன் கணக்கில் கரி பயன்படுத்தப்டுகிறது. இதனால் தொழிற்சாலையில் பணி நடைபெறும் போதெல்லாம் கரும்புகை மண்டலம் நாகராஜகண்டிகை பகுதியை சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் கரித்துகள்கள் காற்றில் பரவி அப்பகுதியில் உள்ள வீடுகளை சூழ்கிறது. 

இந்நிலையில் தொழிற்சாலையின் போக்கை கண்டித்து நாகராஜகண்டிகை பகுதி மக்கள் மேற்கண்ட தொழிற்சாலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை கேட்கும் போது நாகராஜகண்டிகை பகுதியில் சுமார் 600 குடும்பத்தை சேர்ந்த 1800 பேர் வசித்து வரும் நிலையில், தொழிற்சாலையில் இருந்து வரும் கருந்துகள்கள் வீடுகளில் வெளியே வைத்திருக்கும் தண்ணீர் தொட்டிகளில் கரும்படலமாக படிகிறது.

வீட்டிற்கு வெளியே யாரும் அடுப்பில் சமையல் செய்ய இயலாத சூழல் உள்ளது. இந்த கரி கலந்த காற்றை சுவாசிக்கும் இப்பகுதியைச் சேர்ந்த பலர் சுவாச நோய்களால் பாதிக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது என்றார். மேலும் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் இந்த தொழிற்சாலை ஏற்படுத்தும் மாசால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பச்சை பசேலென இருக்க வேண்டிய விவசாய பயிர்கள் கருப்பை பூசியவாறு உள்ளது என குற்றம் சாட்டுகின்றனர்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களுடன் ஆரம்பாக்கம் காவல் ஆய்வாளர் பெ.அய்யனாரப்பன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தொழிற்சாலை நிர்வாகத்தார் இந்த பிரச்சனையை தீர்க்க 5 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சமாதானமடைந்து கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com