பூண்டி ஏரியிலிருந்து 29,719 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்: தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து நிறுத்தம் 

பூண்டி ஏரிக்கான நீர்வரத்து அதிகரித்ததால் முன்னெச்சரிக்கையாக 35 ஆயிரம் கனஅடி திறந்த நிலையில் சனிக்கிழமை காலை முதல் 29719 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 
பூண்டி ஏரி.
பூண்டி ஏரி.

பூண்டி ஏரிக்கான நீர்வரத்து அதிகரித்ததால் முன்னெச்சரிக்கையாக 35 ஆயிரம் கனஅடி திறந்த நிலையில் சனிக்கிழமை காலை முதல் 29719 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் கொசஸ்தலை ஆற்று தரைப்பாலம் மூழ்கியதால் 3-ஆவது நாளாக போக்குவரத்து வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டது. திருவள்ளூர் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை கடந்த சில நாள்களாக விடாமல் பெய்து வருகிறது. இதேபோல், வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை காலை வரையில் தொடர்ந்து பரவலாக பெய்தது. இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, ஜமீன்கொரட்டூர், பூந்தமல்லி, திருத்தணி, ஆவடி, பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. இந்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதோடு ஏரிகளும் நிரம்பியும் வருகின்றன. இதில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

அதனால் ஏரியில் இருந்து பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் பூண்டி நீர்ப்பிடிப்பு பகுதி வரத்து நீர், கிருஷ்ணா கால்வாய் நீர், கிருஷ்ணாபுரம், அம்மம்பள்ளி அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் போன்றவைகளால் 29719 கன அடியாக நீர்வரத்து உள்ளது. இந்த ஏரியின் உயரம் 35 அடியும், 3231 கொள்ளளவு கொண்டதாகும். தற்போதைய நிலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி 34.50 அடி உயரமும், 2953 மில்லியன் கனஅடி நீர் இருப்புள்ளது. இந்த நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சனிக்கிழமை காலை முதல் அப்படியே 29719 கன அடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இந்த உபரி நீர் திறப்பால் கொசஸ்தலை ஆற்றில் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூரிலிருந்து பூண்டி வழியாக செல்லும் தரைப்பாலத்தில் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் எந்த வாகனங்கள் சென்றாலும் அடித்துச் செல்லும் நிலையில் உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் உள்ள நம்பாக்கம், சென்றாயன்பாளையம், திருப்பேர், வெள்ளாத்துக்கோட்டை உள்ளிட்ட 50 கிராமங்களுக்கு கடந்த 3 நாள்களாக தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு, பொதுமக்கள் யாரும் அந்தப்பக்கம் செல்ல விடாமல் இருபுறமும் புல்லரம்பாக்கம் காவல் நிலைய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதோடு, ஆற்று வழித்தடங்களில் கரையோரம் இருபுறமும் தாழ்வான கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதேபோல், புழல் ஏரியில் 2,715 மில்லியன் கன அடி இருப்பு உள்ள நிலையில், 703 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் 833 மில்லியன் கன அடி இருப்பு உள்ள நிலையில், 415 கன அடியும், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகையில், 500 மில்லியன் கன அடி நீர் உள்ள நிலையில், 223 கன அடி என உபரி நீரும் வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): இதில் திருவள்ளூர் பகுதியில் சனிக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு- பள்ளிப்பட்டு-60, ஆர்.கே.பேட்டை, ஆவடி தலா-24, ஜமீன்கொரட்டூர்-21, பூந்தமல்லி-15, திருத்தணி-10, செங்குன்றம்-8, ஊத்தக்கோட்டை-5, பூண்டி-2 என மொத்தம் 189 மி.மீட்டரும் சராசரியாக 12.60 மி.மீட்டர் என பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com