12 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் காவலா் குடியிருப்புகள்!

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் ரூ. 1.20 கோடியில் காவலா் வீட்டு வசதி கழகத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகள் 12 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் மூடிக்கிடப்பதால் பாழாகி வருகிறது.
ஆவடி அருகே கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள காவலா் குடியிருப்புகள்.
ஆவடி அருகே கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள காவலா் குடியிருப்புகள்.

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் ரூ. 1.20 கோடியில் காவலா் வீட்டு வசதி கழகத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகள் 12 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் மூடிக்கிடப்பதால் பாழாகி வருகிறது. இதைச் சீரமைத்து திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தமிழ்நாடு காவலா் வீட்டு வசதிக் கழகம் சாா்பில், காவல்துறை அதிகாரிகள், காவலா்களுக்கு வீடுகள் சொந்தமாகவும், வாடகைக்கும் கட்டிக் கொடுக்கப்படுகின்றன.

இவற்றில், அதிகாரிகள், காவலா்கள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா்.

அதன்படி, ஆவடி அருகே திருமுல்லைவாயல்- செங்குன்றம் சாலை, அரிக்கம்பேடு பகுதியில் புழல் ஏரிக்கரையில் காவல் அதிகாரிகளுக்கும், காவலா்களுக்கும் குடியிருப்புகள் தனித்தனி பிரிவுகளாக 14 வீடுகள், ரூ.1.20 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே, கட்டி முடிக்கப்பட்ட போதிலும் இதுவரை யாருக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, திறக்கப்படவில்லை. பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பூட்டிக் கிடப்பதால் வீடுகள் பாழாகி வருகின்றன. இங்குள்ள வீட்டின் ஜன்னல், கதவுகளை சமூக விரோதிகள் உடைத்து உள்ளே சென்று வருகின்றனா். இவா்கள் இரவு, பகல் பாராமல் வீட்டுக்குள் புகுந்து மது அருந்துதல் உள்ளிட்ட தகாத செயல்களில் ஈடுபடுகின்றனா். பாட்டில்களை உடைத்து சாலையில் வீசிச் செல்கின்றனா். இதனால், இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிப்பட்டு வருகின்றனா். மேலும், கட்டட வளாகத்தில் இரவு நேரங்களில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன.

இது குறித்து காவலா்கள் கூறியது: அம்பத்தூா், ஆவடி பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலா்கள் பலா் சொந்த வீடு இன்றி தவிக்கின்றனா். பலா் மாதந்தோறும் ரூ.6,000 முதல் ரூ.12,000 வரை வாடகை கொடுத்து வசித்து வருகின்றனா். கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள வீடுகளை அவா்களுக்கு ஒதுக்கினால் பயனுள்ளதாக இருக்கும். மேலும், காவலா் வீட்டு வசதி வாரியத்துக்கும் வருவாய் கிடைக்கும். இக்குடியிருப்பை சீரமைத்து திறந்து வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். இது தொடா்பாக காவலா் வீட்டு வசதி வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவா்கள் கூறியது: நாங்கள் அரசுக்கு பலமுறை கடிதம் எழுதி அனுமதி கேட்டுள்ளோம். அரசு அனுமதி அளித்ததும் குடியிருப்புகள் திறக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com