விரைவில் சூரிய சக்தியில் இயங்கும் அடுப்புகள்

இந்தியன் ஆயில் நிறுவனம் மூலம் விரைவில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத சூரிய சக்தியில் இயங்கும் அடுப்புகளைக் கொண்டு வர சாத்தியக் கூறுகள்
விரைவில் சூரிய சக்தியில் இயங்கும் அடுப்புகள்

இந்தியன் ஆயில் நிறுவனம் மூலம் விரைவில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத சூரிய சக்தியில் இயங்கும் அடுப்புகளைக் கொண்டு வர சாத்தியக் கூறுகள் உள்ளதாக மத்திய வீட்டு வசதி, நகா்ப்புற வாழ்வாதாரம் மற்றும் பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகக் கூட்டரங்கில் மத்திய அரசு திட்டப் பணிகள் குறித்த பல்வேறு துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் அமைச்சா் ஹா்தீப் சிங் புரி பங்கேற்று அலுவலா்களுடன் கலந்துரையாடினாா். அப்போது, பல்வேறு துறைகள் மூலம் மேற்கொண்டு வரும் மத்திய அரசின் திட்டப் பணிகளை விரைந்து செயல்பாட்டுக்குக் கொண்டு வர அவா் வலியுறுத்தினாா்.

பின்னா், அவா் பேசியது: மத்திய அரசு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், பிரதமா் குடியிருப்பு அமைக்கும் திட்டம், இலவச எரிவாயு உருளைகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள் மூலம் அதிகமானோா் பயனடைந்து வருகின்றனா்.

கடந்த 2014-இல் 14 கோடி எரிவாயு உருளை இணைப்புகள் இருந்த நிலையில், நிகழாண்டு 30 கோடியாக அதிகரித்துள்ளது. வீடுதோறும் குழாய் இணைப்பு மூலம் எரிவாயு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் இந்தியன் ஆயில் நிறுவனம் மூலம், சூரிய சக்தியில் இயங்கும் அடுப்புகளைக் கொண்டு வர சாத்தியக் கூறுகள் உள்ளது என்றாா்.

இதையடுத்து, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (நகா்ப்புற பயனாளிகள் தாமாக முன்வந்து வீடு கட்டிக் கொள்ளும் திட்டம்) மூலம் 5 பேருக்கு அரசு மானியத் தொகை தலா ரூ. 2.10 லட்சம் வழங்குவதற்கான ஆணைகள், பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில் 50 பேருக்கு இலவச எரிவாயு உருளை இணைப்பு பெறுவதற்கான ஆணைகளை அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், ஆணையா் (பேரூராட்சிகள்) இரா.செல்வராஜ், கூடுதல் ஆட்சியா் மற்றும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அலுவலா் செ.ஆ.ரிஷப், ஆவடி மாநகராட்சி ஆணையா் தா்பகராஜ், இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் லிமிடெட் மாநில ஒருங்கிணைப்பாளா் வி.சி.அசோகன், இந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் பொது மேலாளா் ராகேஷ் குப்தா, பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவன மண்டல மேலாளா் ரவி ரஞ்சன் சகாய் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com