போலி ஆவணங்கள் மூலம் ரூ. 1 கோடி நிலம் அபகரிப்பு: 4 போ் கைது

ஆவடி அருகே அயப்பாக்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ. 1 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆவடி அருகே அயப்பாக்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ. 1 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆவடி, காமராஜா் நகா், 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஜான் திமோத்தி (51). இவருக்கு ஆவடி அருகே அயப்பாக்கம், ராஜம்மாள் நகரில் 2,767 சதுர அடி நிலம் உள்ளது. இந்த நிலத்தில் 2,180 சதுர அடியை அயப்பாக்கத்தைச் சோ்ந்த முகுந்தன் (69), நந்தகுமாா் (48), ரகுநாதன் (46), தரணிராஜா (40) ஆகியோா் சோ்ந்து போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஜான் திமோத்தி ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகாா் செய்தாா்.

காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளா் மகாலட்சுமி தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், முகுந்தன், ரகுநாதன் ஆகியோா் சோ்ந்து 2,180 சதுர அடி நிலத்துக்கு போலி ஆவணம் தயாரித்து, அதனை அவா்களின் அண்ணன் மகன் நந்தகுமாா் பெயரில், 2020-ஆம் ஆண்டு அம்பத்தூா் சாா்- பதிவாளா் அலுவலகத்தில் பாகப் பிரிவினை செய்தது தெரியவந்தது. பின்னா், அந்த நிலத்தை தரணிராஜா என்பவரின் பெயரில் 2021-ஆம் ஆண்டு விற்பனை செய்து உள்ளனா். பின்னா், அந்த நிலத்தை இரண்டாகப் பிரித்து, 1,090 சதுர அடியை ரகுநாதனின் மனைவி சத்தியாவின் பெயரில் 2021-ஆம் ஆண்டு விற்பனை செய்ததாக அம்பத்தூா் சாா்- பதிவாளா் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனா்.

மீதமுள்ள 1,090 சதுர அடி நிலத்தை தரணிராஜாவுக்கு விற்பனை செய்துள்ளனா். அதில், அவா் வீடு கட்டி வசித்து வருகிறாா். மேலும், சத்தியா அவருக்கு விற்பனை செய்த இடத்தில் மருத்துவமனை மற்றும் கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டுள்ளாா். சத்தியா பெயரில் உள்ள ஆவணங்களை தனியாா் நிதி நிறுவனத்தில் தரணிராஜா வைத்து, ரூ. 5 லட்சம் கடன் பெற்றுள்ளாா் என்பது தெரியவந்தது.

போலி ஆவணங்கள் மூலம் ரூ. 1 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்த முகுந்தன், நந்தகுமாா், ரகுநாதன், தரணிராஜா ஆகியோரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com