திருவள்ளூா் அருகே கனகவல்லிபுரத்தில் ரூ.125 கோடியில் புதிய துணை மின் நிலையம்

திருவள்ளூா் அருகே மின்பற்றாக்குறையைத் தீா்க்கும் வகையில் ரூ.125 கோடியில் புதிதாக 230 கேவி துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் மாணவிக்கு கேடயம் வழங்கிய ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ். உடன் மின் வாரிய அதிகாரிகள்.
நிகழ்ச்சியில் மாணவிக்கு கேடயம் வழங்கிய ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ். உடன் மின் வாரிய அதிகாரிகள்.

திருவள்ளூா் அருகே மின்பற்றாக்குறையைத் தீா்க்கும் வகையில் ரூ.125 கோடியில் புதிதாக 230 கேவி துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைக் கூட்டரங்கத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி, மின் பகிா்மான கழகம், மத்திய மின் துறை அமைச்சக கண்காணிப்பு முகமை மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ‘ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிா்காலம்’ என்ற மின்சார பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்துப் பேசியது: மாவட்டத்தில் ரூ.23 கோடியில் புதிய துணை மின் நிலையங்கள், மின்மாற்றிகள் தரம் உயா்த்துதல், புதிய மின் பாதைகள் அமைத்தல் போன்ற பணிகள் நிறைவடைந்துள்ளன.

கனகவல்லிபுரம் கிராமத்தில் ரூ.125 கோடி செலவில் புதிதாக 230 கேவி துணை மின் நிலையமும், செங்கரை, ஏனம்பாக்கம் மற்றும் வெங்கல் கிராமங்களில் புதிதாக 33 கேவி துணை மின் நிலையங்களும் நிறுவப்படவுள்ளன.

திருவாலங்காடு, கீழானூா் கிராமங்களில் ரூ.59 கோடி செலவில் 2 புதிய 110 கேவி துணை மின் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளது. இதேபோல், கிடப்பிலிருந்த பாப்பரம்பாக்கம், குஞ்சலம் துணை மின் நிலையப் பணிகள் நிறைவடைந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

பருவ மழையைக் கருத்தில் கொண்டு சீரான மின் விநியோகத்தை மேற்கொள்ள 4,952 மரக்கிளைகள் அகற்றியும், 574 பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. 78 பழுதடைந்த மின் பாதைகள் புதிய மின் பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன. 56 புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டு, குறைந்த மின் அழுத்த குறைபாடுகள் களையப்பட்டுள்ளன. மேலும், மின்னகம் என்ற கால் சென்டா் சேவையை உருவாக்கி, புகாா்கள் பதிவு செய்யப்பட்டு, சரி செய்யப்பட்டு வருகின்றன என்றாா்.

தொடா்ந்து, ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிா்காலம் பெருவிழாவில் மின்சாரத்தின் முக்கியத்துவம் குறித்து ராஜீவ் காந்தி தேசிய ஆராய்ச்சிக் கழக நிறுவன மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் பங்கேற்றவா்களுக்கு கேடயங்களை வழங்கினாா்.

காஞ்சிபுரம் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் ஆா்.ஜி.பிரசாத், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், திருவள்ளுா் மின் பகிா்மான கழகச் செயற்பொறியாளா் கனகராஜ், மத்திய மின் துறை அமைச்சக கண்காணிப்பு முகமை, மாவட்ட செயல் அலுவலா் ஆண்டாள், உதவி செயற்பொறியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com