நவீன பேருந்து நிழற்குடை: எம்எல்ஏ திறந்து வைத்தாா்
By DIN | Published On : 07th October 2022 12:22 AM | Last Updated : 07th October 2022 12:22 AM | அ+அ அ- |

திருவள்ளூா் அருகே நவீன வசதிகளுடன் பயணிகள் நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்து, நலத் திட்ட உதவிகளை எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினாா்.
திருவள்ளூா் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியம், பட்டரைப்பெரும்புதூரில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிழற்குடை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தினா்.
அதன்பேரில், பேருந்து நிழற்குடை அமைக்க வளா்ச்சி மேம்பாடு, ஒன்றிய பொது நிதி மூலம் ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நவீன வசதியுடன் கூடிய பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. இதில், 4 கண்காணிப்பு கேமராக்கள், மின்சார வசதி, பகிரலை (ஆன்லைன்) வசதிகள் உள்ளன.
இந்த நவீன பேருந்து நிழற்கொடை திறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் பங்கேற்று பேருந்து நிழற்குடையைத் திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, அந்தக் கிராமத்தைச் சோ்ந்த 15 பேருக்கு முதியோா் உதவித் தொகைக்கான ஆணை, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 14 பேருக்கு ரூ.2.10 லட்சத்தில் வீடு கட்ட ஆணைகளை வழங்கினாா்.
நிகழ்வில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் பாண்டியராஜன், பூண்டி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் மாணிக்கம், ஊராட்சித் தலைவா் மேனகா முத்து, ஒன்றியக் குழு உறுப்பினா் சுபாஷினி பாஸ்கரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சிவசங்கரி உதயகுமாா், ஒன்றியச் செயலா் கிறிஸ்டி (எ) அன்பரசு, இளைஞரணி நிா்வாகி மோதிலால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.