ரூ. 1.50 கோடி நில மோசடி: இரு தம்பதிகள் கைது

ஆவடி, போரூர் பகுதிகளில் ரூ. 1.50 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்த வழக்குகளில் இரு தம்பதிகளை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். 

ஆவடி, போரூர் பகுதிகளில் ரூ. 1.50 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்த வழக்குகளில் இரு தம்பதிகளை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
 சென்னை, போரூர், ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தத்தின் மனைவி நிர்மலா தேவி (56). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் மாங்காடு அருகே பரணிபுத்தூரைச் சேர்ந்த பத்மாவதி என்பவரிடம் இருந்து 55 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த நிலத்தை பத்மாவதிக்கு, அதன் முன்னாள் உரிமையாளரான மகாலிங்கம் விற்ற பிறகு, அவரது மகன் சேகர் என்பவர் தனது மனைவி நிர்மலாவுக்கு நிலத்தை எழுதி வைத்துள்ளார். பின்னர், அந்த நிலத்தை விற்பனை செய்ய கண்ணன் என்பவருக்கு பொது அதிகாரத்தை நிர்மலா வழங்கி உள்ளார். இதை அறிந்த நிர்மலாதேவி ரூ. 90 லட்சம் மதிப்பிலான நிலம் மோசடி செய்யப்பட்டு இருப்பதாக ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் அண்மையில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் போலீஸார் வழக்குப் பதிந்து சென்னை, போரூரைச் சேர்ந்த சேகர் (62), அவரது மனைவி நிர்மலா (55) ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனர்.
 இதே போல், ஆவடி அருகே திருநின்றவூர், நாச்சியார் சத்திரத்தைச் சேர்ந்த சங்கமித்ரா (65) தனக்குச் சொந்தமான 6,068 சதுர அடி கொண்ட நிலத்தை பட்டாபிராமைச் சேர்ந்த சந்தியா (30) என்பவருக்கு தையல் கூடம் நடத்த மாதாந்திர வாடகைக்கு 11 மாதங்களுக்கு ஒப்பந்தம் போட்டு உள்ளார். இதன் பிறகு, சந்தியா மீண்டும் அந்த ஒப்பந்தத்தை 3 மாதங்களுக்கு நீடித்துள்ளார். இதற்கிடையில் சந்தியா, தனது கணவர் தணிகைவேல் (39) என்பவருடன் சேர்ந்து போலி ஆவணங்களை உருவாக்கி, சங்கமித்ராவின் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்து உள்ளனர். மேலும், அந்த நிலத்தை அடகு வைத்து பணம் பெற முயன்ற போது சங்கமித்ராவுக்கு தெரியவந்தது.
 இது குறித்து சங்கமித்ரா ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிந்து தணிகைவேல் (39), அவரது மனைவி சந்தியா (30) ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனர். மேற்கண்ட இரு வழக்குகளில் கைது செய்யப்பட்ட இரு தம்பதிகளை திருவள்ளூர் நில அபகரிப்பு நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com