ஆவடி வட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்: 199 மனுக்கள் அளிப்பு

ஆவடி வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியை தொகுதி எம்எல்ஏ சா.மு.நாசர் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து 199 கோரிக்கை மனுக்களைப் பெற்றார். 

ஆவடி வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியை தொகுதி எம்எல்ஏ சா.மு.நாசர் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து 199 கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
 ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜா பவுலின் தலைமை வகித்தார். ஆவடி வட்டாட்சியர் வெங்கடேஷ் வரவேற்றார். இதில், ஆவடி சட்டப்பேரவை உறுப்பினர் சா.மு.நாசர் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து 199 கோரிக்கை மனுக்களைப் பெற்றார். முதல் நாளில் ஆவடி குறுவட்டத்தைச் சேர்ந்த பருத்திப்பட்டு, பாலேரிப்பட்டு, விளிஞ்சியம்பாக்கம், சேக்காடு, தண்டுரை ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பட்டா, பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பெற மனுக்களை வழங்கினர்.
 இதில், 4 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில், ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், ஆவடி மண்டலக் குழுத் தலைவர் ஜி.ராஜேந்திரன், சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியர் சங்கிலிரதி, நத்தம் நிலவரி திட்ட வட்டாட்சியர் மணிகண்டன், வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயகுமாரி, திமுக நிர்வாகிகள் சண்.பிரகாஷ், ஜி.நாராயணபிரசாத், பொன்.விஜயன் மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 மேலும், வட்டாட்சியர் வெங்கடேஷ் கூறியது:
 ஜமாபந்தி புதன்கிழமை திருநின்றவூர் குறுவட்டம், வியாழக்கிழமை திருமுல்லைவாயல் குறுவட்டம், வெள்ளிக்கிழமை மோரை குறுவட்டம், 13-ஆம் தேதி வெள்ளானூர் குறு வட்டம் ஆகிய பகுதிகளில் நடைபெறும்.
 இதில், பொதுமக்கள் தங்களது பிரச்னைகள் குறித்து கோரிக்கை மனு அளித்து தீர்வு காணலாம் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com