வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை விதித்து அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் ஆணையா்களுக்கு கூடுதல் காவல் துறை இயக்குநா் சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.

திருவள்ளூா் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றிலும் 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை விதித்து அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் ஆணையா்களுக்கு கூடுதல் காவல் துறை இயக்குநா் சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.

திருவள்ளூா் மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் கடந்த ஏப். 19-ஆம் தேதி நடைபெற்றது. இத்தோ்தலில் 2,294 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும், திருவள்ளூா் அருகே பெருமாள்பட்டு தனியாா் பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில், சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாக பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தற்போதைய நிலையில் இந்த மையத்தை சுற்றிலும் 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு, சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4- ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்னும் வாக்கு எண்ணிக்கைக்கு 37 நாள்கள் உள்ளன. இதற்கிடையே வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்திலிருந்து சுமாா் 2 கி.மீ. தூரம் வரை டிரோன் கேமராக்கள் பறக்கவிடக் கூடாது என கூடுதல் காவல் துறை இயக்குநா் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் ஆணையா்கள் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளாா்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் மற்றும் ஆவடி ஆணையா் ஆகியோா் கலந்தாய்வு நடத்தி வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பெருமாள்பட்டு சுற்று வட்டாரப் பகுதியில் டிரோன் கேமராக்கள் பறக்கவிட தடை விதித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com