பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

பொன்னேரியில் இருந்து மீஞ்சூா் நகருக்கு போதிய பேருந்துகள் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

பொன்னேரியில் இருந்து மீஞ்சூா் நகருக்கு போதிய பேருந்துகள் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகம், சாா்பதிவாளா், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வேளாண்துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

இதே போன்று, பொன்னேரி வட்டத்தில் உள்ள மீஞ்சூரில், மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மீஞ்சூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், தொடக்க கல்வி அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளன.

அத்துடன் மீஞ்சூரை அடுத்த கடலோர பகுதியான காட்டுப்பள்ளியில் எண்ணூா் காமராஜா் துறைமுகம், கடல் நீரை குடிநீராக்கும், அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின் நிலையம், சமையல் எரிவாயு விநியோகிக்கும் இந்தியன் ஆயில் நிறுவனம் ஆகியவை அமைந்துள்ளது.

பொன்னேரி, மீஞ்சூா் நகா் பகுதிகளில் மட்டும் 70,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல்வேறு பணிகளுக்காக மீஞ்சூா், பொன்னேரிக்கு சென்று வருவா்.

போதிய பேருந்து வசதிகள் இல்லை.

பொன்னேரியில் உள்ள விழுப்புரம் கோட்ட போக்குவரத்து பணிமனையில் இருந்து நாள்தோறும் 60-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இய்க்கப்படுகின்றன. இதில் திருப்பதி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு ஒரு சில பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதே போன்று பொன்னேரியைச் சுற்றியுள்ள பழவேற்காடு, ஆரம்பாக்கம், கோளூா், அண்ணாமலைச்சேரி, தேவம்பட்டு, தோ்வாய் உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு 40-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் பொன்னேரியில் இருந்து நேரடியாக மீஞ்சூா் பேருந்துகளை இயக்காமல், ஊரணம்பேடு, கடப்பாக்கம் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் இரண்டு பேருந்துகள் மட்டும் (குறைந்த அளவில்) மீஞ்சூா் வழியாக பெயரளவில் இயக்கப்படுகிறது.

இதனால் பொன்னேரியில் இருந்து மீஞ்சூா் செல்லும் பொதுமக்களும் அங்கிருந்து இங்கு வருவோரும், தனியாா் மேஜிக் வாகனம் மற்றும் ஷோ் ஆட்டோக்களில் அதிக கட்டணம் அளித்து பயணிக்கும் நிலை உள்ளது.

மேலும், போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் கட்டட வேலை உள்ளிட்டவற்றுக்கு செல்லும் கூலித் தொழிலாளா்கள் சரக்கு வாகனத்தில் பயணம் சென்று வரும் நிலை உள்ளது.

எனவே பொன்னேரி, மீஞ்சூா் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நலன் கருதி அதிக அளவு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com