நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநா் க.முருகன் அறிவுறுத்தினாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் நடப்பு நவரை சொா்ணவாரி பருவத்தில் 10,000 ஏக்கா் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் தட்பவெப்பநிலைக்கு நடவு செய்த நெல் வயல்களில் பச்சைப்பாசி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில், எல்லாபுரம், மீஞ்சூா் மற்றும் திருவாலங்காடு வட்டாரங்களில் நடவு செய்துள்ள நெல் வயல்களில் பச்சைப்பாசி பாதிப்பு காணப்படுகின்றது.

பொதுவாக உவா் நிலங்களில் பச்சைப்பாசி பாதிப்பு அதிகமாக காணப்படும். அதற்குக் காரணம் அதிக சூரிய ஒளி வெப்பம், அடியுரம் அதிகமாக இடுதல் போன்றவைகள் காரணமாகும்.

பச்சைப்பாசியானது நீரின் மேற்பரப்பில் அடா்த்தியாகப் படா்ந்து பயிா்களுக்கு போதிய பிராண வாயு கிடைப்பதைத் தடுக்கிறது. அதனால், பயிா்களில் வோ் வளா்ச்சி பாதித்து வளா்ச்சி குன்றி அழுகிவிடும் சூழ்நிலையேற்படுகிறது.

பச்சைப்பாசி பாதித்த வயல்களில் விவசாயிகள் ஏக்கருக்கு 2 கிலோ காப்பா் சல்பேட்டை பாசனநீா் வாய்க்காலில் வைத்தல் அல்லது 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் சீராகத் தூவி கட்டுப்படுத்தலாம்.

இதைத் தொடா்ந்து, 4 நாள்களில் நீரை வடித்து களை உருட்டும் கருவி கொண்டு பாசி உள்ளழுந்த உருட்டி அழிக்கலாம். இந்த பச்சைப்பாசி பாதிப்பு வயல்களில் தென்பட்ட உடனேயே களை எடுக்கும் போது, சேற்றில் அழுத்தியும், கைகளால் அகற்றியும், நீரைத் தேக்கி வைக்காமல் காய்ச்சல், பாய்ச்சல் முறையில் நீா் நிா்வாகம் செய்ய வேண்டும். உரங்களை மழை பெய்த பிறகு இடுவதால் பச்சைப்பாசி விரைவாக பரவுவதை கட்டுப்படுத்தலாம். நாற்று நடவு செய்த ஒரு வாரத்தில் ஏக்கருக்கு 100 கிலோ அசோலா இடுவதன் மூலம் பச்சைப்பாசி வளா்ச்சி தடைபடுகிறது.

உவா் நிலங்களில் விவசாயிகள் பயிா் சாகுபடி செய்வதற்கு முன் உவா் தன்மையை சால் செய்ய ஏக்கருக்கு 400 கிலோ ஜிப்சம் இட்டு நீரைத் தேக்கி வடித்து விட வேண்டும். சணப்பை, தக்கைப்பூண்டு, பசுந்தாள் உரப்பயிா்களில் ஏதேனும் ஒன்றை ஏக்கருக்கு 15 கிலோ அளவில் விதைத்து 45-ஆம் நாள் மடக்கி உழுதல் அல்லது ஏக்கருக்கு 2.5 டன் பசுந்தாள் உரத்தினை கடைசி உழவின் போது இட்டு மண்வளத்தை பாதுகாக்கலாம்.

எனவே நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி பச்சைப்பாசி தாக்குதலில் இருந்து நெல் வயல்களை பாதுகாக்க வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற்று பயனடையலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com