துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

ஆவடி அருகே துணை மின் நிலையத்தில் மின் கோளாறு காரணமாக 2 உயரழுத்த மின் மாற்றிகள் தீப்பற்றி எரிந்தன.
துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி
dinmani online

ஆவடி அருகே துணை மின் நிலையத்தில் மின் கோளாறு காரணமாக 2 உயரழுத்த மின் மாற்றிகள் தீப்பற்றி எரிந்தன. இதனால் 6 மணி நேரம் மின்சாரம் இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

ஆவடி அருகே சேக்காடு பகுதியில் 110 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு 16 மெகா வாட் திறன் கொண்ட 3 உயர் அழுத்த மின்மாற்றிகள் உள்ளன. இந்த துணை மின் நிலையத்திலிருந்து பட்டாபிராம், சேக்காடு, கோபாலபுரம், தண்டுரை, கண்ணடபாளையம் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு 10.30 மணி அளவில் துணை மின் நிலையத்தில் இருந்த ஒரு உயர் அழுத்த மின்மாற்றியில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக, மின் மாற்றி தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விரைந்து பரவி பக்கத்தில் இருந்த மற்றொரு உயர் அழுத்த மின்மாற்றியிலும் பற்றியது.

இந்த தீ அப்பகுதி முழுவதும் பரவி கரும்புகையுடன் வானுயரத்துக்கு பரவியது. இதன் காரணமாக துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் கரும்புகை புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இரு உயரழுத்த மின் மாற்றிகளும் எரிந்ததால் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து பட்டாபிராம், சேக்காடு, தண்டுரை, கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகள் இருளில் மூழ்கியது. மின்சாரம் இன்றி கடும் புழுக்கத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்பட்டனர்.

தகவல் அறிந்து ஆவடி கோட்ட செயற்பொறியாளர் சௌந்தராஜன், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தலைமையில் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து, தீயணைப்புக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதன் பிறகு ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதியில் இருந்து 5}க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து, ரசாயனம் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதற்கிடையில் ஆவடி சட்டப்பேரவை உறுப்பினர் சா.மு.நாசர், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக இயக்குநர் மணிவண்ணன், தலைமைப் பொறியாளர் சுகுமாரன், மேற்பார்வை பொறியாளர் சித்ரா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.அப்போது அதிகாரிகளிடம் நாசர் எம்எல்ஏ மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு உடனடியாக மாற்று ஏற்பாடாக மின் விநியோகம் செய்யவும், புதிய மின் மாற்றிகளை விரைந்து கொண்டு வந்து பொருந்தி மின் விநியோகத்தைச் சீரமைக்க கேட்டுக் கொண்டார்.

இதன் பிறகு மின்வாரிய அதிகாரிகள் ஆவடி, திருவேற்காடு, மிட்டனமல்லி ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரத்தை பெற்று, மேற்கண்ட பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் மின் விநியோகம் வழங்கினர். இதனால் 6 மணி நேரம் மின்சாரம் இன்றி பொதுமக்கள் அவதிபட்டனர். மேலும் எரிந்த உயிர் அளித்த மின்மாற்றிகளை அகற்றிவிட்டு, புதிய மின் மாற்றிகளை பொருத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இது குறித்து மின்வாரிய உயர் அதிகாரிகள் கூறியது:

சேக்காடு துணை மின் நிலையத்தில் மின்சார சீரமைப்புப் பணிகள் முற்றிலுமாக முடிவதற்கு 3 நாள்கள் ஆகும். அதுவரை அருகில் உள்ள துணை மின் நிலையங்களில் இருந்து பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் தொடர்ந்து விநியோகம் செய்யப்படும். மின் கோளாறு காரணமாக எரிந்து சேதமான இரு உயரழுத்த மின் மாற்றிகள் மதிப்பு ரூ.6 கோடி என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com