கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த மருந்தாளுநா்கள்

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 700 மருந்தாளுநா் காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மருந்தாளுநா்கள் திங்கள்கிழமை
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை கோரிக்கை அட்டைகளை அணிந்து பணியில் ஈடுபட்ட மருந்தாளுநா்கள்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை கோரிக்கை அட்டைகளை அணிந்து பணியில் ஈடுபட்ட மருந்தாளுநா்கள்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 700 மருந்தாளுநா் காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மருந்தாளுநா்கள் திங்கள்கிழமை கோரிக்கை அட்டைகளை அணிந்து பணிபுரிந்தனா்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சுமாா் 700-க்கும் மேற்பட்ட மருந்தாளுநா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்பக்கோரி, தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்கத்தினா் பல்வேறுகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கோரிக்கை அட்டை அணிந்து 4 நாள்கள் பணிபுரிவதென முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டக் கிளையைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மருந்தாளுநா்கள் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி திங்கள்கிழமை வரை 4 நாள்கள் கோரிக்கை அட்டையை அணிந்து பணிபுரிந்தனா்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் அன்பழகன், மாவட்டச் செயலா் பாா்த்தசாரதி, மாவட்டப் பொருளாளா் முரளிதரன், மாவட்ட இணைச் செயலா் எஸ்.காா்த்திகேயன் உள்பட மருந்தாளுநா்கள் கோரிக்கை அட்டைகளை அணிந்து பணியில் ஈடுபட்டனா்.

இந்த அட்டைகளில் 1945-ஆம் ஆண்டு மருந்தியல் சட்ட விதி திருத்தங்களை மத்திய அரசு கைவிட வேண்டும். மக்கள் நலன் கருதி 1948-ஆம் ஆண்டு மருந்தியல் சட்டப்படி மருந்துகளை மருந்தாளுநா் மட்டுமே கையாள வேண்டும் என்பதை அமல்படுத்த வேண்டும்.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 700-க்கும் மேற்பட்ட மருந்தாளுநா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சங்க நிா்வாகிகள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com