திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இன்றி நோயாளிகள் அவதி!
By சா.சரவணப்பெருமாள் | Published On : 22nd July 2019 08:06 AM | Last Updated : 22nd July 2019 08:06 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளைப் பரிந்துரை செய்வதால், வழியில் நோயாளிகள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்களை நியமிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.
திருவண்ணாமலைக்கு பௌர்ணமி நாள்களில் பல லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதுதவிர, மேல்மருவத்தூர் ஸ்ரீஆதிபராசக்தியம்மன் கோயில், மேல்மலையனூர் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரியம்மன் கோயில், காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள கோயில்கள் மற்றும் புதுச்சேரி, பெங்களூரு நகரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தின் வழியாக தினமும் பல ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர்.
எனவே, திருவண்ணாமலை மாவட்டச் சாலைகளில் வாகனப் போக்குவரத்தும், நாளுக்கு நாள் வாகன விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளன. விபத்துகளில் சிக்கி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்க முடிவதில்லை. மாறாக, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
பரிந்துரை செய்வது ஏன்...?: திருவண்ணாமலை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை வேலூருக்கு பரிந்துரை செய்வது ஏன் என்று மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் (தாய்), உயிர் காக்கும் அனைத்து மருத்துவர்களையும் கொண்டு சென்னைக்கு அடுத்தபடியாக தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஏராளமான மருத்துவக் கருவிகளும் உள்ளன.
மேலும், இருதய ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பை சரிசெய்யும் கேத்லேப் (இஹற்ட் கஹக்ஷ) பிரிவு செயல்படுவதுடன், மாரடைப்பு, பக்கவாத நோய்களுக்கு ரூ.80 ஆயிரம் வரையிலான மருந்துகளையும் இலவசமாகவே செலுத்தி, நோயைக் குணப்படுத்துகின்றனர்.
அதுபோன்ற உயிர்காக்கும் சிறப்பு மருத்துவர்கள், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருத்துவக் கருவிகள், மருத்துவமனைப் பணியாளர்கள் திருவண்ணாமலையில் போதிய அளவு இல்லை.
மேலும், நரம்பியல், பிளாஸ்டிக் சர்ஜரி, ரத்த நாள அறுவைச் சிகிச்சை, சிறுநீரகப் பிரிவுகளில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் ஒருவர்கூட இல்லை. குறிப்பாக, அவசர சிகிச்சைப் பிரிவில் காலியாக உள்ள 6 மருத்துவ அலுவலர்
(இஹள்ன்ஹப்ற்ஹ் ஙங்க்ண்ஸ்ரீஹப் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ்) பணியிடங்களும் காலியாகவே உள்ளன. இதனால், நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்க முடிவதில்லை என்றனர்.
வழியில் இறக்கும் நோயாளிகள்: மாரடைப்பு, பக்கவாதம், மூளையில் அடிபடுதல் போன்ற நோய்கள் மற்றும் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடுபவர்களை குறித்த நேரத்துக்குள் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெறச் செய்தால் மட்டுமே உயிர் பிழைக்க வைக்கலாம். ஒவ்வொரு நொடியும் நோயாளியின் உயிரைக் காக்கும் நிமிடமாகக் கருதப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், திருவண்ணாமலையில் இருந்து ஒரு நோயாளியை வேலூருக்கு அனுப்பி வைக்கும்போது, உயிர் காக்கும் மணித்துளிகள் (எர்ப்க்ங்ய் ஏர்ன்ழ்ள்) தவறவிடப்பட்டு, நோயாளி இறக்க நேரிடுகிறது. எனவே, வேலூருக்கு நோயாளிகளை அனுப்பி வைப்பதைத் தவிர்க்கவும், பயண நேரத்தில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்களை உடனடியாக நியமித்து, மருத்துவக் கருவிகளையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
"அரசுக்கு கோரிக்கை'
இதுகுறித்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஷகில் அஹமதுவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: தேவையான மருத்துவர்களை நியமிக்கக் கோரி, அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளோம். விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றார் அவர்.