அரசுப் பள்ளியில் சேர்ந்த 146 தனியார் பள்ளி மாணவர்கள்

ஆரணி மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் பயின்று வந்த 146 மாணவர்கள் வெளியேறி, ஆரணி நகராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்துள்ளனர் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் பெர

ஆரணி மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் பயின்று வந்த 146 மாணவர்கள் வெளியேறி, ஆரணி நகராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்துள்ளனர் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் பெருமிதம் தெரிவித்தார்.
ஆரணி கண்ணப்பன் தெருவில் உள்ள நகராட்சி அரசுப் பள்ளியில் 1-ஆம் வகுப்பு முதல் 
10-ஆம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளன.  நிகழாண்டு 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் பயின்று வந்த 146 மாணவர்கள் இப்பள்ளியில் சேர்ந்துள்ளனர். 
இந்த மாணவர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் வாழ்த்தினார். 
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
 தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஆகையால்தான் தனியார் பள்ளி மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர். 
அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ளது, மாணவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
 தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதாலும், அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேருகின்றனர், ஆரணி கண்ணப்பன் தெருவில் உள்ள இப்பள்ளியில் மட்டும் 146 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 
மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளிலிருந்து அதிகளவிலான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர். இதற்குக் காரணம் தமிழக அரசு பள்ளிக் குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக எடுத்த முயற்சிகள்தான்.
 சில மாதங்களில் ஒவ்வொரு பள்ளியாக சென்று, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 5 மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்கவேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்க உள்ளோம். ஒவ்வொரு அலுவலரும் 500 முதல் 1000 வரையிலான தனியார் பள்ளி மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற இலக்கும் நிர்ணயித்துள்ளோம் என்றார். ஆரணி கல்வி மாவட்ட அலுவலர் சம்பத், பள்ளித் தலைமை ஆசிரியர் வசந்தா, முன்னாள் நகர்மன்றத் தலைவர் எஸ்.கே.ரத்தினகுமார், சிறு,குறு வணிகர் சங்கத் தலைவர் அருண்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com