செய்யாறு ஜமாபந்தியில் மனு அளிக்க திரண்ட பொதுமக்கள்

செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ஆயிரக்கணக்கான பொது மக்கள் திரண்டனர்.

செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ஆயிரக்கணக்கான பொது மக்கள் திரண்டனர்.
 செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் 1428-ஆம் பசலிக்கான ஜமாபந்தி ஜூன் 7-ஆம் தேதி தொடங்கி 18-ஆம் தேதி வரை நடைபெற்றது. ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாய அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
 கடைசி நாளான செவ்வாய்க்கிழமை செய்யாறு நகரம் மற்றும் உள்வட்டம் என்பதால் இப்பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து தங்களது குறைகளைத் தெரிவித்து மனு அளித்தனர்.
 மாவட்ட ஆட்சியர் ஆய்வு
 செய்யாறு நகரப் பகுதியைச் சேர்ந்த வைத்தியர் தெரு, இளங்கோ தெரு, கிடங்குத் தெரு, கொட நகர் தேவேனரிக்கரை ஆகிய பகுதிகளில் வசித்து வரும் 150-க்கும் மேற்பட்டோர் வீட்டுமனைப் பட்டா கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
 அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அந்தப் பகுதிகளை திருவத்திபுரம் நகராட்சி ஆணையர் சி.ஸ்டான்லிபாபு, வட்டாட்சியர் ஆ.மூர்த்தி ஆகியோருடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 மாற்றுத் திறனாளிக்கு பணி
 செய்யாறு செல்வவிநாயகர் கோவில் தெருவில் தனது தாய் மற்றும் அண்ணனுடன் வசித்து வரும் மாற்றுத் திறனாளியான பொருளியியல் முதுநிலை பட்டதாரி முல்லைக்கொடி என்பவர் குடும்பச் சூழ்நிலை காரணமாக பணி வேண்டி மனு அளித்து இருந்தனர். அவரது தன்னம்பிக்கையைப் பாராட்டி அவருக்கு செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கணினி இயக்குநராக புதன்கிழமை முதல் (ஜூன் 19) பணிபுரிய உத்தரவிட்டார்.
 அதேபோன்று, ஒரு பெண்ணுக்கு தையல் இயந்திரமும், மாற்றுத் திறனாளி இருவருக்கு மூன்று சக்கர சைக்கிளும் மனு அளித்த உடனே வழங்கினார். மேலும், தூளி கிராமத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளி மகேந்திரனுக்கு சொந்த பணத்தில் இருந்து ரூ.5 ஆயிரம் வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com