காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 24th March 2019 01:20 AM | Last Updated : 24th March 2019 01:20 AM | அ+அ அ- |

செய்யாறு அருகே விசாரணைக்கு அழைத்துச் சென்ற மூவரை விடுவிக்கக் கோரி, அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெம்பாக்கம் வட்டம், மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்(33).அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ்(31), சின்னஏழாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன்(31). இவர்கள் மூவர் மணல் கொள்ளை மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் எனத் தெரிகிறது.
இவர்களை வெள்ளிக்கிழமை காலை தூசி போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.
நீண்ட நேரமாகியும் இவர்கள் வீட்டுக்கு வரவில்லை எனத் தெரிகிறது. இதனால், ஜெகனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை மாலை தூசி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும், மாமண்டூர் ஜெகனின் உறவினர்களான மோகனாம்பாள், கிருஷ்ணவேணி, பாலமுரளி, தங்கதுரை ஆகியோர் தீக்குளிக்க முயன்றனர்.
அப்போது, போலீஸார் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். இருப்பினும், மூவரையும் விடுவித்தால் தான் போராட்டத்தை கை விடுவோம் எனத் தொடர்ந்து கோஷமிட்டனர்.
தகவலறிந்து வந்த டி.எஸ்.பிக்கள் ஜேசுராஜ் (செய்யாறு), தேவநாதன் (வந்தவாசி) , ஆய்வாளர் ரேகா, உதவி ஆய்வாளர் பிரபு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, விசாரணைக்கு அழைத்து வந்தவர்களை செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும், எப்போது போலீஸார் அழைத்தாலும் மூவரும் வர வேண்டும் என்றும் அவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு மூவரையும் அனுப்பி வைத்தனர்.