வாகனச் சோதனையில் ரூ.4 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 24th March 2019 01:21 AM | Last Updated : 24th March 2019 01:21 AM | அ+அ அ- |

வந்தவாசி போளூர், செங்கம் அருகே உரிய ஆவணங்களின்றி கார்களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 லட்சத்து 18 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
வந்தவாசி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட நிலை கண்காணிப்புக் குழு அலுவலர் துளசிராமன், உதவி ஆய்வாளர் கோவிந்தராஜூலு உள்ளிட்டோர் வந்தவாசி-திண்டிவனம் சாலையில் உள்ள நடுக்குப்பத்தில் சனிக்கிழமை காலை வாகனச் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாகச் சென்ற 2 கார்களை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் ஒரு காரில் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூ.66 ஆயிரம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. மற்றொரு காரில் புதுச்சேரியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூ.53 ஆயிரம் எடுத்துச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரிடமிருந்து மொத்தம் ரூ.1.19 லட்சத்தை பறிமுதல் செய்த நிலைக் குழுவினர், அந்த பணத்தை வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஆர்.அரிக்குமாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வட்டாட்சியர் ஆர்.அரிக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பறிமுதல் செய்யப்பட்ட பணம் வந்தவாசி துணை கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு பணம் திரும்ப வழங்கப்படும் என்றார்.
போளூர்
போளூர் சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த பறக்கும்படை அலுவலர் எல்.சுரேஷ் தலைமையிலான அலுவலர்கள்,
சந்தவாசல் கூட்டுச் சாலையில் சென்ற காரில் இருந்த ரூ.59ஆயிரத்தையும், வெண்மணி கூட்டுச் சாலையில் சென்ற காரில் ரூ. 94,100ம், வெண்மணி கிராமத்தில் போளூர்-சேத்துப்பட்டு சாலையில் சென்ற ரூ.73, 150யையும் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ.2லட்சத்து 25 ஆயிரத்து 250யை போளூர் வட்டாட்சியர் ஜெயவேலுவிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல, கலசப்பாக்கம் தொகுதி பறக்கும் படையைச் சேர்ந்த செந்தில்குமார் தலைமையிலான அலுவலர்கள் காப்பலூர் கூட்டுச் சலையில் வாகனச் சோதனை மேற்கொண்டபோது, உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.73,610யை பறிமுதல் செய்தனர்.
செங்கம்
செங்கத்தை அடுத்த திருவண்ணாமலை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை கோணங்குட்டை கேட் பகுதியில் தேர்தல் கண்காணிப்பு பறக்கும்படை அதிகாரி சக்திவேல், எஸ்.ஐ.ராஜசேகர் ஆகியோர் கொண்ட பறக்கும்படை அதிகாரிகள் வாகனத் தணிக்கயில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பத்தூரில் இருந்து கள்ளக்குறிச்சியை நோக்கி சென்ற மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.
அந்த வாகனத்திற்கு பதிவு எண்கள் இல்லை. மேலும் வாகனத்தில் எந்தவித ஆவணமும் இல்லாமல் ரூ.53 ஆயிரத்து 600 பணம் இருந்துள்ளது. பணத்தை பறிமுதல் செய்து செங்கம் உதவி தேர்தல் அலுவலர் வில்சன்ராஜசேகர், வட்டாட்சியர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலையில் செங்கம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.