தனியார் நிறுவன ஊழியர் காரில் கடத்தல்: 4 பேர் கைது

 திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்திச் சென்றதாக 4 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். கார் பறிமுதல் செய்யப்பட்டது. 


 திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்திச் சென்றதாக 4 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். கார் பறிமுதல் செய்யப்பட்டது. 
செய்யாறை அடுத்த குண்ணவாக்கம் கிராமத்தைச்  சேர்ந்த ஆறுமுகம் மகன் பெருமாள் (50). செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ள தனியார் ரப்பர் பெல்ட் தயாரிக்கும் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர், வழக்கம்போல சனிக்கிழமை காலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்குச் சென்றார். 
செல்லபெரும்புலிமேடு கிராமத்தில் தனியார் டிராக்டர்  நிறுவனம் அமைத்து வரும் பகுதியில் வந்தபோது, காரில் வந்த மர்ம நபர்கள் பெருமாளை வழிமறித்து, சரமாரியாக தாக்கி கடத்திச் சென்றதாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் குறித்து அவரது மனைவி வாசுகி தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த டிஎஸ்பி ஜேசுராஜ் மற்றும் போலீஸார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். 
மேலும், பெருமாளின் செல்லிடப்பேசிக்கு தொடர்பு கொண்டு இருப்பிடத்தை அறிந்து கொண்டனர். இதற்கிடையே, போலீஸார் தேடி வருவதை அறிந்த கடத்தல்காரர்கள் பெருமாளை காஞ்சிபுரம் அருகே காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர்.  
உடனே தூசி போலீஸார் பெருமாளை மீட்டு அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். 
விசாரணையில், காரில் கடத்திச் சென்றவர்கள் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலின் போது, பறக்கும் படையினருக்குப் பயந்து அழிசல்பட்டு ரப்பர் தொழிற்சாலை அருகே கோடிக்கணக்கிலான பணத்தை வீசிச் சென்றதாகவும், அந்தப் பணத்தை தான் (பெருமாள்) எடுத்துச் சென்றதாகவும் கூறி காரில் கடத்திச் சென்றதாகத் தெரிவித்தார். இந்த நிலையில், பெருமாளை கடத்திச் சென்ற காரை காஞ்சிபுரம் அருகே போலீஸார் மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தனர். 
இது தொடர்பாக, வேலூர் மாவட்டம், ஒச்சேரியைச் சேர்ந்த துரைசாமி (27), நெமிலி வட்டம், மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த சௌந்தர் (23), ஆற்காடு பாஷா தெரு அப்சல்பாஷா(19), காவேரிப்பாக்கம் பானாவரம் சாலை அல்தாப் (19) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
மேலும், தலைமறைவான அரக்கோணம் வட்டம்,  சங்கரம்பாடி சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த அலிம் (28) என்பவரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com