இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி

கடலாடி ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்டவேண்டும் என ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலாடி ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு புதிய நீர்த்தேக்கத் தொட்டி கட்டவேண்டும் என ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 கலசப்பாக்கத்தை அடுத்த கடலாடி ஊராட்சியில் 1971-ஆம் ஆண்டு ஊராட்சிமன்றக் கட்டடத்துடன் சுமார் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இந்தத் தொட்டிக்கு கடலாடி புதிய காலனி அருகே திறந்தவெளிக் கிணற்றில் இருந்து குழாய் மூலம் நீர் ஏற்றப்பட்டு, ஊராட்சியில் உள்ள 12 வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் நடைபெற்று வந்துள்ளது.
 தற்போது இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் பழுது ஏற்பட்டுள்ளதால் ஊராட்சியில் உள்ள பிரதான சாலை, ஈஸ்வரன் கோவில் தெரு, அருந்ததி காலனி, பருவதமலை சாலையில் உள்ள குடியிருப்புகள் என குறைந்தளவு பகுதிகளுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
 இந்தத் தொட்டி பழுதடைந்து தண்ணீர் கசிகிறது. கசிவு நீரால் ஏற்பட்ட ஈரப்பதத்தில் தொட்டியைச் சுற்றி செடிகள் முளைத்து வளர்ந்துள்ளன.
 மேலும், தொட்டியின் அடிப்பாகத்தில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த நீர்த்தேக்கத் தொட்டி பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ளதால், இடிந்து விழும்பட்சத்தில் பெரியளவில் உயிர்ச்சேதம் ஏற்படலாம்.
 எனவே, இடிந்து விழும் நிலையில் உள்ள இந்தத் தொட்டியை அரசு உடனடியாக அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட வேண்டும் என ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 மேலும் ஊர் பிரமுகர்கள் கூறியதாவது: கடலாடி ஊராட்சியில் குடிநீர் தேவைக்காக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறுமின்விசை குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
 இதில் 20-க்கும் மேற்பட்டவை பழுதடைந்து பயனற்ற நிலையில் உள்ளன. சுமார் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தால்தான் ஊராட்சி மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்ய முடியும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com