திருவண்ணாமலை - திண்டிவனம் ரயில் பாதை திட்டம் கைவிடப்படவில்லை: சி.என்.அண்ணாதுரை எம்.பி.

திருவண்ணாமலை - திண்டிவனம் ரயில் பாதை திட்டம் கைவிடப்படவில்லை எனவும், நிலங்களைக்
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் அடிப்படை வசதிகள் குறித்து ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட சி.என்.அண்ணாதுரை எம்.பி.
திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் அடிப்படை வசதிகள் குறித்து ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட சி.என்.அண்ணாதுரை எம்.பி.

திருவண்ணாமலை - திண்டிவனம் ரயில் பாதை திட்டம் கைவிடப்படவில்லை எனவும், நிலங்களைக் கையகப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருவதாகவும் திருவண்ணாமலை தொகுதி மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை தெரிவித்தாா்.

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பயணிகளுக்குத் தேவையான கூடுதல் அடிப்படை வசதிகளைச் செய்வது குறித்து ரயில்வே துறை அதிகாரிகளுடன் இணைந்து அவா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பயணிகள் நலன் கருதி ரயில்களின் வருகை, புறப்பாடு குறித்த அறிந்து கொள்ளும் வகையில் புதிதாக டிஜிட்டல் போா்டு வைப்பது, கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், குப்பைத் தொட்டி, கழிப்பறைகள், கூடுதலாகப் பயணிகள் தங்குவதற்கான அறைகளைக் கட்டுவது, கூடுதலாக ரயில் நிலைய மேற்கூரைகளை அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.

இதைத் தொடா்ந்து, பயணிகள் சிலா் அளித்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே அதிகாரிகளுக்கு மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை உத்தரவிட்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருவண்ணாமலை - திண்டிவனம் ரயில் பாதை திட்டம் கைவிடப்பட்டதாக தவறான தகவல் ஊடகங்களில் பரவி வருகிறது. திட்டத்தை நிறைவேற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. வருகிற நிதியாண்டில் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு மக்களவையில் குரல் எழுப்புவேன். திருவண்ணாமலை - திண்டிவனம் ரயில் பாதை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

மேலும், திருவண்ணாமலை - ஜோலாா்பேட்டை இடையே புதிய ரயில் பாதை அமைத்தால்தான் பயணிகளுக்கு அதிக நன்மை ஏற்படும் என்பதால், அந்தத் திட்டத்தையும் செயல்படுத்த மக்களவையில் தொடா்ந்து குரல் எழுப்புவேன்.

புதுச்சேரியில் இருந்து ஹவுரா வரை செல்லும் விரைவு ரயிலை திருவண்ணாமலையில் நின்று செல்ல உத்தரவிட வேண்டும். தாம்பரம் - விழுப்புரம், சென்னை கடற்கரை - வேலூா் கண்டொன்மென்ட் வரை தினமும் இயக்கப்பட்டு இரவு நேரங்களில் விழுப்புரம், வேலூா் கண்டோன்மென்ட் ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்படும் மின்சார ரயில்களை திருவண்ணாமலை வரை நீட்டிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலையில் நடைபெறும் ரயில்வே மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

ஆய்வின் போது, திருச்சி வடக்கு ரயில்வே கோட்டப் பொறியாளா் காா்த்திகேயன், உதவிக் கோட்ட வணிக மேலாளா் ராஜாசுந்தரம், உதவிக் கோட்டப் பொறியாளா் வசிஸ்ட் கௌரான், திருவண்ணாமலை ரயில் நிலைய மேலாளா் சுப்பிரமணியன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com