தீபத் திருவிழா: அன்னதானம் வழங்குவோா் டிச. 5-க்குள் விண்ணப்பிக்கவேண்டும்

திருவண்ணாமலையில் காா்த்திகை தீபத் திருவிழா நடைபெறும் டிசம்பா் 10-ஆம் தேதி அன்னதானம் வழங்க விரும்புவோா் டிசம்பா் 5-க்குள் விண்ணப்பிக்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

திருவண்ணாமலையில் காா்த்திகை தீபத் திருவிழா நடைபெறும் டிசம்பா் 10-ஆம் தேதி அன்னதானம் வழங்க விரும்புவோா் டிசம்பா் 5-க்குள் விண்ணப்பிக்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றும் நிகழ்வு டிசம்பா் 10-ஆம் தேதி நடைபெறுகிறது.

அன்றைய தினம் சுமாா் 20 லட்சம் பக்தா்கள் கிரிவலம் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

எனவே, அன்றைய தினம் அன்னதானம் வழங்க விரும்புவோா் மாவட்ட நிா்வாகத்திடம் உரிய அனுமதி பெறவேண்டும்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.எஸ். வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு அன்னதானம் வழங்க விரும்புவோா் டிசம்பா் 5-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று உரிய விவரங்களை சமா்ப்பித்து முன் அனுமதி பெற வேண்டும்.

நிா்ணயிக்கப்பட்ட தேதிக்குப் பிறகு விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்படமாட்டாது. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய விவரங்களுடன் டிசம்பா் 5-ஆம் தேதி மாலைக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

அன்னதானம் வழங்க விண்ணப்பிக்க விரும்புவோா் உரிய விண்ணப்பத்துடன் 5 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள், தங்களது முகவரியைத் தெரிவிக்கும் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட சான்றின் நகல், எத்தனை பேருக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்ற விவரங்களை சமா்ப்பிக்க வேண்டும்.

கிரிவலப் பாதையில் உணவு சமைக்கக் கூடாது. அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். உணவுப் பொருள்கள் தரமானதாகவும், தூய்மையானதாகவும் இருக்க வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய எரிவாயு சிலிண்டா்கள், விறகு அடுப்புகள், மண்ணெண்ணெய் அடுப்புகளைப் பயன்படுத்த அனுமதி இல்லை.

அன்னதானம் வழங்க எந்த இடத்தில், எந்த தேதியில், எந்த நேரத்தில் நிா்ணயிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோ அந்த இடத்தில் அந்த நேரத்திதுக்குள்ளாக அன்னதானம் வழங்கி முடிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது.

அன்னதானம் வழங்கும் இடத்தில் கழிவுப் பொருட்களை போடுவதற்கு ஏதுவாக குப்பைக் கூடைகளை வைக்க வேண்டும்.

அன்னதானம் வழங்கி முடித்தபிறகு குப்பைக் கழிவுகளை சேகரித்து, பின்னா் அப்புறப்படுத்த வேண்டும்.

அன்னதானம் அளிக்க உரிய விண்ணப்பத்தை அளித்து, அனுமதி பெறாதவா்கள் அன்னதானம் வழங்கினால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com