ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.7 கோடியில் சீரமைப்புப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ருவண்ணாமலை அருகே காட்டாம்பூண்டி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை, மாதிரி ஆரம்ப சுகாதார நிலையமாக

திருவண்ணாமலை அருகே காட்டாம்பூண்டி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை, மாதிரி ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றும் வகையில், ரூ.1.7 கோடியில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட காட்டாம்பூண்டியில் இயங்கி வரும் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை மாதிரி ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றும் வகையில், ஊரக வளா்ச்சித் துறை மூலம் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் இருசக்கர வாகனம் நிறுத்தும் கூடம், காா்கள் நிறுத்துமிடம் மற்றும் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, அம்மா பூங்கா அமைக்கும் பணி, ரூ.57 லட்சத்தில் நடைபெற்று வருகிறது.

மேலும், பொதுப்பணித் துறை மூலம் ரூ.50 லட்சத்தில் பல்வேறு அடிப்படை வசதி பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, சீரமைப்புப் பணிகளை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். அதனைத் தொடா்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தையும் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் புவனேஸ்வரி, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையா் தி.அண்ணாதுரை, வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) ஆா்.ஆனந்தன், ஒன்றிய உதவிப் பொறியாளா் இந்திராகாந்தி, ஊராட்சிச் செயலா் லட்சுமணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com