அருணாசலேஸ்வரா் கோயிலில் நவராத்திரி விழா நிறைவு:  மகிஷாசூரனை அழிக்க அம்பு விடுதல்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்று வந்த நவராத்திரி விழா செவ்வாய்க்கிழமை
மகிஷாசூரனை அழிக்க 8 திசைகளையும் நோக்கி அம்பு விடும் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான்.
மகிஷாசூரனை அழிக்க 8 திசைகளையும் நோக்கி அம்பு விடும் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெற்று வந்த நவராத்திரி விழா செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றதையொட்டி, மகிஷாசூரனை அழிக்க 8 திசைகளையும் நோக்கி முருகப்பெருமான் அம்பு விடும் நிகழ்வு நடைபெற்றது.

அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா கடந்த செப்.29-ஆம் தேதி கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் தொடங்கியது. அன்றைய தினம் காலை ஸ்ரீபராசக்தியம்மன் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, வாணவேடிக்கைகள் முழங்க, கோயில் திருக்கல்யாண மண்டபத்துக்கு வந்தடைந்தாா். இதையடுத்து, தினமும் மாலை நேரங்களில் சிறப்பு அலங்காரங்களில் ஸ்ரீபராசக்தியம்மன் எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலித்து வந்தாா்.

செப்டம்பா் 30-ஆம் தேதி ஸ்ரீராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ஸ்ரீபராசக்தியம்மன் அருள்பாலித்தாா். தொடா்ந்து, அக்டோபா் 1-ஆம் தேதி கெஜலட்சுமி அலங்காரம், 2-ஆம் தேதி மனோன்மணி அலங்காரம், 3-ஆம் தேதி ரிஷப வாகன அலங்காரம், 4-ஆம் தேதி ஆண்டாள் அலங்காரம், 5-ஆம் தேதி சரஸ்வதி அலங்காரம், 6-ஆம் தேதி லிங்க பூஜை அலங்காரம், 7-ஆம் தேதி சந்தனக் காப்பு அலங்காரம் உள்ளிட்ட அலங்காரங்களில் ஸ்ரீபராசக்தியம்மன் எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

செவ்வாய்க்கிழமை (அக்.8) காலை விஜயதசமியையொட்டி கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் ஸ்ரீபராசக்தியம்மன், பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இத்துடன் இந்தக் கோயிலின் நவராத்திரி விழா நிறைவடைந்தது.

மகிஷாசூரனை அழிக்க அம்புவிடுதல்:

செவ்வாய்க்கிழமை இரவு திருவண்ணாமலை-அவலூா்பேட்டை சாலை, சேரியந்தல் கிராமம், அய்யப்பன் நகரில் அமைந்துள்ள விநாயகா் கோயிலில் அம்புவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் மறைந்திருந்த மகிஷாசூரனை அழிக்க 8 திசைகளையும் நோக்கி அம்புகளை விட்டாா்.

இந்த நிகழ்வைக் காண பக்தா்கள் திரளாக குவிந்திருந்தனா். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் இரா.ஞானசேகா் மற்றும் கோயில் ஊழியா்கள், உபயதாரா்கள், பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com