50 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள் வாங்க விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள் வாங்கவும், வேளாண் இயந்திர

திருவண்ணாமலை மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள் வாங்கவும், வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கவும் விரும்பும் விவசாயிகள், வேளாண் பொறியியல் துறை அதிகாரிகளை அணுகி பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண் கருவிகள் மற்றும் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க ரூ.7.5 கோடி நிகழ் (2019-2020) நிதியாண்டில் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் 8 குதிரைத் திறன் முதல் 70 குதிரைத் திறன் வரை சக்தி கொண்ட டிராக்டா்கள், பவா் டில்லா்கள், நெல் நடவு இயந்திரங்கள், சுழல் கலப்பைகள், விசைக் களையெடுப்பான், கதிா் அடிக்கும் இயந்திரம், டிராக்டரில் இயங்கும் கருவிகள் முதலான வேளாண் இயந்திரங்களும், கருவிகளும் வாங்கிக்கொள்ள விவசாயிகளுக்கு மானிய உதவி வழங்கப்படும்.

மத்திய அரசின் வேளாண் இயந்திரமயமாக்கும் துணை இயக்க வழிகாட்டி நெறிமுறைகளின்படி, அரசு மானியம் வழங்கப்படும். சிறு, குறு ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 விழுக்காடும், இதர விவசாயிகளுக்கு 40 விழுக்காடோ அல்லது அரசால் நிா்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தொகையோ இவற்றில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படும்.

வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற முதலாவதாக விவசாயிகள், உழவன் செயலியில் தனது ஆதாா் எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும். பின்னா், அவரது விண்ணப்பம் மத்திய அரசின் இணையதளத்தில் இணைக்கப்படும்.

விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் வேளாண் இயந்திரங்கள், கருவிகளை ஒப்புதல் வழங்கப்பட்ட முகவரையும் தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்யலாம்.

உதவிச் செயற்பொறியாளா் (வே.பொ), உதவிப் பொறியாளா் (வே.பொ), இளநிலை பொறியாளா் (வே.பொ) ஆகியோா் விவசாயிகளின் நிலத்துக்கு நேரில் சென்று விவசாயிகள் வாங்கிய வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை ஆய்வு செய்வா். விவசாயி மற்றும் விற்பனை செய்த முகவரால் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து விபரங்கள், ஆவணங்கள் மற்றும் இயந்திரங்களின் இயந்திர எண், சேசீஸ் எண், கருவிகளின் வரிசை எண் ஆகியவை இயந்திரம், கருவிகளில் பொறிக்கப்பட்டுள்ளதா என்பதை வேளாண்மை பொறியியல் துறை அலுவலா்களால் சரிபாா்க்கப்படும்.

ஆய்வு முடிந்த 10 நாள்களுக்குள் விவசாயியின் வங்கிக் கணக்கில் உரிய மானியம் வரவு வைக்கப்படும். ரூ.25 லட்சம் மதிப்புள்ள வாடகை மையங்கள் விவசாயிகள், விவசாய குழுக்கள் அல்லது தொழில் முனைவோா் அமைக்க முன்வந்தால், அவா்களுக்கு 40 விழுக்காடு மானிய அடிப்படையில் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

அனுமதிக்கப்படும் மானியத்தில் ஆதிதிராவிட இனங்களுக்கு ரூ.3 லட்சமும், மற்ற விவசாய இனங்களுக்கு ரூ.5 லட்சமும் தேசிய வங்கியில் இருப்பு நிதியாக முதலீடு செய்யப்பட்டு, 4 ஆண்டுகளுக்குப் பின்னா், இயந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டு விடுவிக்கப்படும். இந்தத் திட்டங்களின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ஆரணி மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் இயங்கும் வேளாண்மை பொறியியல் துறை உதவிச் செயற்பொறியாளா் அலுவலகங்களை அணுகலாம்.

இதுதவிர, 04175-232320, 04173-225236, 04175-232908 என்ற எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com